Thursday, October 9, 2008

பங்கு சந்தை - அக்டோபர் 08 நிலவரத்தில்

பங்கு சந்தை இப்போது BSE 11,000 ரேஞ்சில் இருக்கிறது, இது 20,000 இலிருந்து ஏறக்குறைய பாதிக்கு வந்து விட்டது. பங்கு சந்தையில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் பணம் போட்டவர்கள் எல்லோருக்கும் நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் என்ன செய்வது?

அடுத்த சில மாதங்களில் பங்கு சந்தை இன்னும் கீழே இறங்குமா, அல்லது மேலே போகுமா, இல்லை இதே லெவலில் இருக்குமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், என்னைப் பொறுத்த வரை, இந்தியாவில் இருக்கும் நல்ல வியாபாரம் செய்யும் கம்பெனிகள், இன்னும் 3 ஆண்டுகள், அல்லது 5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் முன்னேறி இருக்கும் என்றுதான் நம்புகிறேன். (எ.கா. ITC, Infosys, SBI, Reliance). இவற்றில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.

உங்களிடம் இன்னமும் சேமிப்பு நிறைய இருந்தால்: கொஞ்சம் கொஞ்சமாக, முதலீடு செய்ய இது நல்ல தருணம். நிலமை இப்படியே நீடித்தால், வெளியே கடன் வாங்குவது இன்னமும் சிரமமாகிவிடும். இதை மனதில் வைத்து, மிச்சம் இருப்பதைக் கொண்டு பரஸ்பர நிதி வாங்கலாம்.

அவ்வளவாக பணம் இல்லை என்றால்: ஏற்கனவே பரஸ்பர நிதியில் போட்ட பணத்தை வெளியில் எடுக்க வேண்டாம். மார்க்கெட் மேலே போகும்போது “பங்கு வாங்க வேண்டும்” என்றும் , கீழே போகும்போது “ விற்று விடுவோம், நஷ்டமாவது குறையும்” என்றும் நினைப்பது இயற்கை. இந்த இயற்கை உணர்வை செயல்படுத்தினால், வருவது நஷ்டம்தான்!

அமெரிக்காவில் பங்கு சந்தையில் பல கோடிகள் சம்பாதித்த வாரன் பஃபே (Warren Buffet) சொல்வதை நினைவு படுத்துகிறேன். ‘ எல்லோரும் பேராசைப் படும்பொழுது, பயப்படுங்கள். எல்லோரும் பயப்படும்பொழுது, பேராசைப் படுங்கள்' ( Be fearful when others are greedy, be greedy when others are fearful).
இது எல்லோரும் பயப்படும் தருணம். பேராசைப் பட வேண்டாம், தைரியமாகவாவது இருக்க வேண்டும்.

பின் குறிப்பு: நிதித் திட்டமிடுதல் பதிவுகளை எழுதுவதை நிறுத்திய போதிலும், மார்க்கெட் விழும் சமயத்தில் இது தேவை என்றே தோன்றியது. அதனால்தான் இந்தப் பதிவு.

Tuesday, July 1, 2008

நிதித்திட்டமிடுதல் முடிவுரை (Financial Planning. End)

இதுவரை நிதி திட்டமிடுதல் பற்றி எனக்கு தெரிந்த விவ்ரங்களை, சில பதிவுகளில் எழுதி இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை இதில் வேறு விஷயங்கள் பெரிதாக இல்லை. அதனால் இத்துறையில் மேலும் பதிவுகள் வராது.

மற்ற படி, மார்க்கெட் நிலை மேலும் கீழும்தான் போய்க்கொண்டு இருக்கும். தற்போதைக்கு மிகவும் கீழே இருக்கிறது. அதனால் உடனே பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது. (எப்பொழுதும் போல) மாதா மாதம் கொஞ்சம் தொகையை நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். சில வருடங்களுக்கு அதை விற்பது பற்றி யோசிக்க வேண்டாம்.

நான் ”எந்த பரஸ்பர நிதியை வாங்கலாம்” என்ற பதிவில் ‘நல்ல பரஸ்பர நிதிகள்' என குறிப்பிட்டு சிலவற்றை தொகுத்திருக்கிறேன். அவற்றை மட்டும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, மாற்றம் இருந்தால் பதிவாக எழுதப் போகிறேன். மற்றபடி இத்துறையில் பதிவு எழுத விஷயம் இல்லை.

Saturday, June 21, 2008

நிதித் திட்டமிடுதல்.எடுத்துக்காட்டு 2 மற்றும் 3

எடுத்துக்காட்டு 2: இந்த எடுத்துக்காட்டில், வருவாய் அதிகம் இருக்கும் ஒருவர் எவ்வாறு திட்டமிடலாம் என்பதைப் பார்க்கலாம். ஒருவரது மாத வருமானம் ரூ 50,000 (வரி போன பிறகு) என்று வைத்துக் கொள்வோம்.

இவரது வரவு செலவு கணக்கானது தோராயமாக:இவர்களுக்கு மாத செலவு. உணவு 5000 ரூபாய், துணி, குழந்தை பள்ளி செலவு, வண்டிக்கு பெட்ரோல் இதர செலவுகள் 10000 ரூபாய். ஆபிசில் பி.எஃப்.இல் 5000 ரூபாய் போடுகிறார். மாதம் 20,000 ரூபாய் வங்கிக் கடன் (வீட்டுக் கடன்) கட்டுகிறார். மீதி 10,000 ரூபாய் தேறும். இது சேமிப்பு என எடுத்துக் கொள்வோம். ஆனால் இதிலிருந்து வருடா வருடம் 50,000 ரூபாய் யூலிப் (ULIP) என்ற இன்சூரென்ஸ் மற்றும் பரஸ்பர நிதி சேர்ந்த திட்டத்தில் போடுகிறார். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் இப்படி பணம் போட்டிருக்கிறார், மேலும் 18 ஆண்டுகள் போடவேண்டும்.


வங்கி சேமிப்பு 2 லட்சம். தங்கம் (நகைகள்) 20 பவுன்,இதன் மதிப்பு சுமார் 1.6 லட்சம். இவர் எப்படி திட்டமிடவேண்டும், முதலீடு செய்ய வேண்டும்?

முதலில் இவர் வைப்பு நிதியில் 1 லட்சம் அல்லது 1.5 லட்சம் போட வேண்டும். எல்லாம் சேமிப்பு (savings account) கணக்கில் இருந்தால், சில சமயம் அத்தியாவசியம் இல்லாத செலவில் இது கரைய வாய்ப்பு உள்ளது. வைப்பு நிதியில் இருந்தால், அதை ‘உடைத்து' பணத்தை வெளியே எடுக்க கொஞ்ச நேரம் ஆகும். அப்போது, நாம் ‘இது தேவைதானா?' என்று யோசிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, சேமிப்பு நிதியில் இருந்து அந்தப் பணத்தை எடுத்து வைப்பு நிதியில் போட வேண்டும். அடுத்து ஓரிரு வருடங்களில், இந்த வைப்பு நிதி அளவை 2 அல்லது 4 லட்சமாக அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு:இப்போது பல வங்கிகளில், வைப்பு நிதியையும் சேமிப்பு கணக்கையும் லின்க் செய்ய வழி உள்ளது. என்னைக் கேட்டால், அப்படி செய்ய வேண்டாம் என்று சொல்வேன். வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை 'அவசர தேவைக்கு' (real emergency need) அல்லது திட்டமிட்ட செலவுக்கு (planned expense, like downpayment for a house) மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டில் எல்.சி.டி. டி.வி.யை எக்சேன்ஜ் செய்து பிளாஸ்மா டி.வி. வாங்க, வைப்பு நிதியை உடைக்கக் கூடாது. வைப்பு நிதியையும், சேமிப்பு கணக்கையும் லின்க் செய்தால், தவறாக செலவு செய்வது சுலபமாகிவிடும்.

அடுத்து, ULIP இல் பணம் போடுவது தவறு என்பது என் கருத்து. சரி, தலையைக் கொடுத்தாகி விட்டது, அடுத்து என்ன செய்வது? நாம் முதலீடு செய்த ULIPஇன் terms and conditionsஐ படிக்க வேண்டும். பல சமயங்களில், ”3 வருடம் கழித்து விலகிக் கொண்டால், ஓரளவு பயன் கிடைக்கும், அதற்கு முன் விலகினால் எல்லாமே கோவிந்தா” என்று இருக்கும். அப்படி இருந்தால், இன்னம் ஒரு வருடம் பணம் கட்டி, அதன் பின் விலகி விட வேண்டும்.

அதன் பின்னர், Term insurance என்ற வகை இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும். இதன் செலவு மிகக் குறைவாக இருக்கும். 10 லட்சத்திற்கு வருடத்திற்கு 3000 ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இதில் அடுத்த வருடம் நீங்கள் இறந்தால் உங்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் கிடைக்கும், இல்லாவிட்டால் 3000 ரூபாய் போய்விடும். மறுபடி 3000 கட்ட வேண்டும், 2ம் வருடம் நீங்கள் இழந்தால் 10 லட்சம் வீட்டிற்கு, இல்லாவிட்டால் 3000 நிறுவனத்திற்கு.

பிறகு, ULIPஇல் போடாமல் மிச்சமிருக்கும் பணத்தையும், மாத சேமிப்பையும், நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். இது 50000-3000 = 47,000 / year + 10,000 / month. அதாவது, சுமார் ஒவ்வொரு மாதமும் 14,000 சேமிக்க முடியும். இது எல்லாவற்றையும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யக்கூடாது. முன்பு பார்த்தது போல கொஞ்சம் பணத்தை (உதாரணமாக பாதி சேமிப்பை) சேமிப்பு கணக்கில் வைத்து, 1 லட்சம் சேர்ந்ததும் வைப்பு நிதியில் போட வேண்டும். மீதியை, மாதா மாதம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை எல்லா பணத்தையும் சேர்த்து பரஸ்பர நிதி வாங்கக் கூடாது.

இவரது பிற்கால செலவுகள் என்று பார்த்தால், மகன்/மகளது திருமண/கல்வி செலவுகள், மற்றும் இவர் ரிடையர் ஆன பிறகு இருக்கும் செலவுக்கு பணம் ஆகிய இரண்டுதான். வீடு, இவருக்கு ஏற்கனவே இருக்கிறது.

இவரது மாத சேமிப்பான 14,000 வைத்து முதலீடு செய்தால் பிற்காலத்தில் எவ்வளவு பணமாக வரும்? வைப்பு நிதியில் மாதம் 7,000 (அதாவது வருடம் சுமார் 85,000 என்று வைத்துக் கொள்வோம்), மற்றும் பரஸ்பர நிதியில் மாதம் 7,000 போடுகிறார். வைப்பு நிதிக்கு 8% வட்டி என்றும், பரஸ்பர நிதியில் 15% வருமானம் என்றும் வைத்துக் கொள்வேம். இதே கணக்கில் சென்றால், 15 வருடங்கள் கழித்து, இவரிடம் வைப்பு நிதிமூலம் 24 லட்சமும், பரஸ்பர நிதி மூலம் 47 லட்சமும் இருக்கும். மொத்தமாக 71 லட்சம் இருக்கும்.

இது தவிர, 15 வருடத்தில் வீட்டுக்கடன் முழுவதும் அடைத்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால் வீட்டிற்கு கட்டும் பணம் மிச்சம். 15 வருடங்களில் வருமானமும், செலவும் அதிகரித்திருக்கும். சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவரது குழந்தைகளின் கல்லூரி மற்றும் திருமண செலவுகளை சமாளிப்பது சுலபமாகவே இருக்கும்.



எடுத்துக்காட்டு 3:
வருமானம் மிகக் குறைவாக இருப்பவர்கள் என்ன செய்யலாம்? உங்கள் மாத வருமானம் 5,000 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சென்னையில் இருந்தால், இதை வைத்து நிறைய சமாளிப்பது கடினம். பெரும்பாலும், நண்பர்களுடன் சேர்ந்து ரூம் போட்டு தங்கி இருப்பீர்கள்.
  1. நீங்கள் வெளியே கடன்வாங்காமல் சமாளிப்பதையே முதல் வேலை. அடுத்து, வருமானத்தை உயர்த்த வழி பார்க்க வேண்டும்.

  2. கணிப்பொறி பற்றி படித்தோ,அல்லது உங்கள் துறையில் மேல் படிப்பு படித்தோ, ஏதாவது ஒரு வழியில், மாத சம்பளத்தை 10,000 ஆகவாவது உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால், என்னதான் சிக்கனமாக இருந்தாலும் போதுமான அளவு சேமிக்க முடியாது.

  3. சேமிப்பு 25,000 அல்லது 30,000 என்று உயர்ந்த பிறகு, அதிலிருந்து 20,000 அல்லது 25,000 ஐ வைப்பு நிதியில் போட வேண்டும். இது அவசரத்திற்கு ஓரளவாவது உதவும்.

  4. நீங்களூம் Term insurance என்ற வகை இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும். 5 லட்சம் ரூபாய்க்கு எடுத்தால், வருடத்திற்கு 1,500 ரூபாய் ஆகலாம். நிச்சயமாக இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும்.

  5. அதன் பிறகு முடிந்தால், மாதம் 500 ரூபாய் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், 3 மாதத்திற்கு ஒரு முறையாவது 1000 ரூபாயை பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். 'பரஸ்பர நிதியானது, பணக்காரர்களுக்கு மட்டுமே சரியானது, நமக்கு சரி வராது' என்ற எண்ணம் வேண்டாம். அது தவறான் எண்ணம்.
  6. இப்படி பரஸ்பர நிதியில் போடும் பணத்தை குறைந்த பட்சம் 3 வருடங்களுக்கு எடுக்கக் கூடாது. மேலும்பல வருடங்களுக்கு விட்டு வைப்பது, அந்த முதலீடு வளர வழிவகுக்கும்

  7. மாத வருமானம் நன்றாக உயரும் வரை, சென்னையில் வீடு வாங்குவது பற்றி சிந்திக்க வேண்டாம். உங்கள் சொந்த ஊரில் குறைந்த விலையில் வீடு கிடைத்தால், அது வேறு விஷய்ம். அதற்கு எவ்வளவு செலவாகும் என கணக்கிட்டு, கடன் வாங்கி சில வருடங்களில் அடைத்து விட முடிந்தால் பரவாயில்லை. “இல்லை, நான் சென்னையில் செட்டில் ஆக விரும்புகிறேன்” என்றால் வருமானத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை

Monday, May 26, 2008

பரஸ்பர நிதியில் முதலீடு செய்தல் - SIP முறை (Investing in Mutual Funds - SIP)

பரஸ்பர நிதியை வாங்கும் பொழுது ஒரே சமயத்தில் நிறைய பணத்தை முதலீடு செய்யக் கூடாது. (இந்த இடத்தில் பங்குகளில் முதலீடு செய்யும் Equity based mutual funds மற்றும் கலப்பு நிதி எனப்படும் hybrid funds or balanced funds ஆகியவற்றை மட்டுமே சொல்கிறேன். Debt funds எனப்படும் வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியில் ஒரே சமயத்தில் நிறைய பணத்தை முதலீடு செய்யலாம்.) எந்த நிதியை வாங்கலாம் என்று முடிவு செய்த பிறகு, முதலீடு செய்யப்போகும் அளவைப் பொறுத்து சுமார் 6 மாதம் அல்லது 1 வருடம் அல்லது 2 வருடமாக அதை மாதா மாதம் சிறிய தொகையில் முதலீடு செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் இதுவரை பரஸ்பர நிதியில் முதலீடு செய்யாமல் இருக்கிறீர்கள். நண்பர்கள் சொல்லியோ அல்லது செய்தித்தாளில் படித்தோ, ‘நாமும் முதலீடு செய்வோம்' எனத் தொடங்கி, கையில் இருக்கும் சேமிப்பில் ஒரு பாதியை முதலீடு செய்ய முடிவு செய்கிறீர்கள். உங்கள் சேமிப்பு சுமார் 2 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு லட்சத்தை ஒரு நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் என்ன தவறு? அதை ஏன் மாதம் 10,000 ரூபாய் என்று 10 மாதங்களில் அல்லது மாதம் 5,000 ரூபாய் என்று 20 மாதங்களில் முதலீடு செய்ய வேண்டும்?


மார்க்கெட் மேலேயே போய்க்கொண்டு இருந்தால், மொத்தம் ஒரு லட்சத்தையும் இன்றே முதலீடு செய்வது நல்லது. அதில்தான் அதிக லாபம் கிடைக்கும். மார்க்கெட் கீழேயே போய்க்கொண்டு இருந்தால், அதில் முதலீடு செய்யவே கூடாது. பேசாமல் வங்கியில் வைப்பு நிதியில் பணத்தை போட்டு வைக்க வேண்டும்.

ஆனால் மார்க்கெட் சீராக மேலேயோ கீழேயோ போகாது. ஏறி இறங்கும் தன்மை (ஆங்கிலத்தில் volatility என்று சொல்லப்படும்) மார்க்கெட்டின் இயற்கை. அவ்வாறு ஏறி இறங்கும் வகையில் மார்க்கெட் செல்லும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது நல்லது. இதற்கு Systematic Investment Plan அல்லது SIP என்று பெயர்.

இதனால் இரண்டு பயன்கள் உண்டு.
  • மார்க்கெட் அதிகமாகப் போகும்பொழுது, பரஸ்பர நிதியில் விலையும் அதிகமாக இருக்கும் (50 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்). அப்போது ஆயிரம் ரூபாய்க்கு முதலீடு செய்தால் அதில் 20 பரஸ்பர நிதி யூனிட்டுகள் கிடைக்கும்.


  • அடுத்த மாதம் மார்க்கெட் 20% விழுந்தால், இந்த பரஸ்பர நிதியும் 40 ரூபாய் ஆகிவிடும். இப்போது ஆயிரம் ரூபாய்க்கு 25 யூனிட்டுகள் கிடக்கும்.


  • மூன்றாம் மாதம் மார்க்கெட் பழைய நிலைக்கு வந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். பரஸ்பர நிதியின் விலையும் 50 ரூபாய் ஆகிவிடும்.


  • இப்போது, உங்கள் மொத்த செலவு 2 மாதத்திற்கு 2,000 ரூபாய். உங்களிடம் இருக்கும் யூனிட்டுகள் 45 ஆகும். அதன் மொத்த மதிப்பு 2250 ரூபாய். நிகர லாபம் 250 ரூபாய்.
    மொத்தமாக முதலீடு செய்து இருந்தால், லாபமோ நட்டமோ இருக்காது.


  • இதற்கு பதிலாக வேறு ஒரு எடுத்துக் காட்டையும் காணலாம். முதல் மாதம் யூனிட்டின் விலை 40 ரூபாய், 2ம் மாதம் 50 ரூபாய், 3ம் மாதம் மீண்டும் 40 ரூபாய் என்று இருந்தால்?


  • மொத்தமாக முதலீடு செய்து இருந்தால் நட்டம் இருக்காது. SIP முறையில் செய்திருந்தால், 200 ரூபாய் நட்டம் இருக்கும். (45 யூனிட் * 40 ரூபாய் = 1800 ரூபாய்). அதனால் SIP எல்லா சமயங்களிலும் நன்மை தரும் என்று சொல்ல முடியாது. ஆனால், மார்க்கெட் பெரும்பாலும் ஏறி இறங்கியும், நீண்ட நாட்களில் ஏறுமுகமாகவும் (அதாவது 5 வருடம் கழித்து இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்கும்படி) இருந்தால், SIP முறையில் நல்ல லாபம் இருக்கும்.



இவ்வாறு நான் சொல்வதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் ஆங்கிலத்தில் இருக்கும் இந்த தளத்திற்கு சென்றால், இந்தியாவில் இருக்கும் எல்லா பரஸ்பர நிதிகளுக்கும், SIP முறையில் முதலீடு செய்வதற்கும், மொத்தமாக முதலீடு செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிடலாம்.

உதாரணமாக, Franklin Templeton Prima Plus G எனப்படும் பரஸ்பர நிதியில், 2004 ஜனவரி முதல் 2006 மே மாதம் வரை முதலீடு செய்தால், இப்போது SIP வகையில் 44%ம், மொத்த முதலீட்டில் (அதாவது எல்லா பணத்தையும் 2004 ஜனவரியில் முதலீடு செய்தால்) 35%ம் லாபம் இருக்கும் என்பதை பார்க்கலாம். இங்கு முதலீடு செய்யும் காலத்தை மாற்றி, 2007 மே வரை முதலீடு செய்திருந்தால், இப்போது SIP வகையில் 45%ம், மொத்த முதலீட்டில் 39%ம் லாபம் என்பதை பார்க்கலாம். இந்த தளம், பலவகையான பரஸ்பர நிதிகளில் எவ்வித வருமானம் வந்திருக்கும் என்பதை சுலபமாக கணக்கிட்டு காட்டுகிறது.

சில சமயங்களில் மொத்த முதலீடு அதிக லாபம் தரும் என்பதும் உண்மையே. ஆனால், அதற்கு சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். எது ‘சரியான நேரம்' என்பதை, அது முடிந்து சில வருடங்கள் ஆகும் வரை சொல்ல முடியாது. எனவே அது நாம் பழைய கதையைப் பேசத்தான் உதவுமே ஒழிய, இன்றோ நாளையோ முதலீடு செய்ய முடிவெடுக்க உதவாது.

SIP இல் இன்னோரு பயன் உண்டு. நம்மில் பலர், ஒழுங்காக மாதாமாதம் முதலீடு செய்வதில்லை. SIPஇல், ஆறு மாதத்திற்கு, அல்லது 1 வருடத்திற்கு காசோலைகளை எழுதி மொத்தமாக கொடுத்து விட வேண்டும். அல்லது வங்கியில் இருந்து மாதாமாதம் பணம் எடுத்துக் கொள்ள பரஸ்பர நிதி நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் (ECS or Electronic Clearing Service). அதனால் ‘இந்த மாதம் மறந்துவிட்டேன்' என்ற பிரச்சனை கிடையாது. Regularity என்ற ஒழுங்குப்பாடு குறைந்தால், நாம் இழப்பவை பல. அவற்றில் நிதித்திட்டத்திலாவது ஒரு பாதுகாப்பாக அமைவது SIP முறை ஆகும்.

Monday, March 31, 2008

நிதித் திட்டமிடுதல் - அட்டவணை (Financial Planning- Index)

இதுவரை எழுதிய பதிவுகளை கீழே தொகுத்திருக்கிறேன்.

  1. நிதி திட்டமிடுதல்-1 (தொடக்கம்) Financial Planning - Introduction

  2. நிதி திட்டமிடுதல்-2. பாதுகாப்பு, மற்றும் சேமிப்பை பங்கிடுதல் Financial Planning (Safety and Savings Distribution)
    • பல வகை முதலீடுகளில் எந்த அளவு பாதுகாப்பு என்பது பற்றியும், சேமிப்பை எந்த முதலீடுகளில் எவ்வளவு போடலாம் என்பது பற்றியும் விவரங்கள்

  3. வருமானம் (வட்டி விகிதம்) (Returns and Liquidity)
    • ஒவ்வொரு முதலீட்டிலும் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம், எவ்வளவு சுலபமாக பணத்தை எடுக்க முடியும் என்பது பற்றிய விவரம்

  4. பரஸ்பர நிதி கேள்வி பதில் -1 (Mutual Funds Q&A -1)

  5. பரஸ்பர நிதி கேள்வி பதில் -2 (Mutual Funds Q&A -2)

  6. பரஸ்பர நிதி- வைப்பு நிதி (Debt Funds)
    • இது பெரும்பாலானவர்களுக்கு தேவையில்லை. விட்டுவிடலாம். You can skip this

  7. பரஸ்பர நிதி - செலவுகள் (Mutual Fund Expenes/Loads)

  8. பரஸ்பர நிதி - டிவிடெண்ட் மறு முதலீடு (Mutual Funds Dividend Reinvestment
    • இது பெரும்பாலானவர்களுக்கு தேவையில்லை. விட்டுவிடலாம். You can skip this

  9. பரஸ்பர நிதி. எதை வாங்குவது? சில சிபாரிசுகள். (Mutual Funds-What to buy? Recommendations)

  10. நிதி திட்டமிடுதல் எடுத்துக்காட்டு 1a (Financial Planning Example 1a)


  11. நிதி திட்டமிடுதல் எடுத்துக்காட்டு 1b (Financial Planning Example 1b)

  12. பரஸ்பர நிதியில் முதலீடு செய்தல் - SIP முறை (Investing in Mutual Funds. SIP)


தற்போதைக்கு இதுவே கடைசி பதிவு. 26th May 2008. மீண்டும் எழுத தொடங்கி விட்டேன். வேலை பளு அதிகமாவதால், மற்ற எடுத்துக்காட்டுகளை எல்லாம் எழுதவில்லை. எழுத விட்ட விவரங்கள் மிகச் சுருக்கமாக, கீழே.
கீழே பரஸ்பர நிதி என்பது, பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் பரந்த பங்கு வாங்கும் பரஸ்பர நிதி (Diversified Equity Mutual Funds, investing primarily in large caps).

1. நீங்கள் இதுவரை பங்கு சந்தையில் நேரடியாகவோ அல்லது பரஸ்பர நிதி மூலமோ பணம் முதலீடு செய்யவில்லை என்றால், பரஸ்பர நிதி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது உங்களுக்கு நல்லது. முதலில் உங்களுக்கு கடன் இருந்தால் அதை அடைக்கவேண்டும். வீட்டுக்கடன் மட்டும் விதிவிலக்கு. நீங்கள் 20 -30 வயதில் இருந்தால், சேமிப்பில் 60% பரஸ்பர நிதியிலும் 40% வைப்பு நிதி/பி.எஃப்.இஅல் போடவும். 30-40ல், 50% பரஸ்பர நிதியிலும் 50% வைப்பு நிதியிலும் போடவும். 40-50ல் , சேமிப்பில் 40% பரஸ்பர நிதியிலும், 60% வைப்பு நிதியிலும் போடவும். இந்த வயதில் அடுத்த தலைமுறைக்கான் செலவுகள் (கல்லூரி, திருமணம்) அதிகம் இருக்கும், நீங்கள் 20 லிருந்து 40 வயதில் முதலீடு செய்த பணம் இப்போது பயன்படும். அடுத்தக் கட்டத்தில் 50க்கு மேல் பரஸ்பர நிதியில் முதலீட்டை குறைந்து 20 அல்லது 30% போட்டால் நல்லது.

2. இப்போது உங்களிடம் கையில் நிறைய பணம் இருக்கிறது. நீங்கள் பரஸ்பர நிதியில் இது வரை பணம் போடவில்லை என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் முதலீடு செய்ய 10,000 மேல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் வீதம் 5 மாதத்தில் போடவும். இது SIP (Systematic Investment Plan) எனப்படும். இதன் நன்மைகளைப் பற்றி பின்னர் சில மாதங்கள் கழித்து எழுதுகிறேன். உங்களிடம் 5 லட்சம் இருந்தால், மாதம் 20,000 வீதம் 2 வருடம் போடவும். ஒரே நாளில் அத்தனை பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். உங்களிடம் இப்பொழுது மொத்த சேமிப்பாக இருப்பதே 5000 ரூபாய்தான் என்றால் அதை ஒரு மாதத்தில் போடலாம். ஆனால் அடுத்த மாதம் முதல் சேமிப்பை அதிகரித்து மாதம் 1000ஆவது போட முயற்சி செய்யுங்கள்.

இது வரை படித்தவர்களுக்கும், கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி.

Sunday, March 30, 2008

நிதித் திட்டமிடுதல் - எடுத்துக்காட்டு-1b

கணக்கிடுதல். நமக்கு 20 வருடம் கழித்து 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 10% அல்லது 15% அளவு வருமானம் தரும் வழியில் முதலீடு செய்யலாம். மாதா மாதம் எவ்வளவு பணம் போட வேண்டும்?

Recurring deposit என்னும் வகை சேமிப்பிற்கு , மாதாமாதம் இவ்வளவு பணம் போட்டால், குறிப்பிட்ட வட்டி விகிதத்தில், இவ்வளவு நாட்கள் கழித்து மொத்தம் வரும் பணம் எவ்வளவு என கணக்கிட சமன்பாடு இருக்கிறது. அதையே திருப்பிப் போட்டால், நம் கேள்விக்கு விடை கிடைக்கும்.

நாம் எதிர்பார்க்கும் தொகை (Total T) = 10 லட்சம்
நாட்கள் அல்லது காலம் (Number of Months, N) = 20 * 12 = 240 மாதங்கள்
வட்டி விகிதம் (interest, i) = 15% (ஆண்டுக்கு) = 15/12 % (மாதத்திற்கு)

மாதாமாதம் செய்ய வேண்டிய முதலீடு (Payment per month, P)


சமன்பாடு

P = (T * i) / { (1+i)^^N -1 }

நமது உதாரணத்தில் 20 வருடம் கழித்து, 15% வட்டி விகிதத்தில் 10 லட்சம் சம்பாதிக்க,
மாதாமாதம் நாம் போட வேண்டிய பணம் 668 ரூபாய் ஆகும்.

இங்கு நினைவில் கொள்ள வேண்டியது:

1. வைப்பு நிதியில் 7% எதிர்பார்க்கலாம்.
2. பங்கு சந்தையில், பல வருடங்கள் காத்திருக்க தயார் என்றால் 15% எதிர்பார்க்கலாம்.
3. நமக்கு நேரம் மிக நன்றாக இருந்தால் 20% கூட வரலாம். இல்லையென்றால் 10% ஆகக் குறையலாம்.
4. 30%, 40% என்று எதிர்பார்ப்பது பேராசை.


கீழே இருக்கும் அட்டவணையில், அவரது தேவையை பூர்த்தி செய்ய மாதம் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டு உள்ளது.


இவர் வீடு வாங்குவது (அதாவது முழுப் பணத்தையும் கட்டி வீடு வாங்குவது நடக்காது. மற்ற குறிக்கோள்கள் நடக்க வாய்ப்பு உண்டு. மாதம் 4000 ரூபாய் என்ற அளவில் பங்கு சந்தையில் பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்தால் (15% என்ற எதிர்பார்ப்பில்) தேவைகளை பூர்த்தி செய்யலாம். ஆனால் சேமிப்பை 2000லிருந்து 4000 ஆக்க வேண்டும்.

இப்போது இருக்கும் செலவில் வருமான வரி காட்டவில்லை. தவிர, ஆயுள் காப்பிற்கு காப்பு தொகை (ஆண்டுக்கு 2000 முதல் 3000 வரை இருக்கும்) சேர்க்க வேண்டும். இதெல்லாம் கணக்கில் எடுத்தால், இவர் மனைவியும் வேலைக்கு சென்றால்தான் முடியும். அப்போது கூட வீட்டை கடன் வாங்காமல் வாங்க முடியாது.

இவர் வீடு கடன் வாங்கினால், அதற்கு மாதம் கட்ட வேண்டிய பணத்தின் அளவை கணக்கிட்டு அதை மாத செலவுகளில் சேர்க்க வேண்டும். அது போக மீதம் சேமிக்கும் பணத்தில் தான் மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

இவர் பரஸ்பர நிதியில் போடாமல், வைப்பு நிதியில் மட்டும் முதலீடு செய்தால் 7%தான் எதிர்பார்க்கலாம். அப்போது, 5 வருடம் அல்லது 10 வருடம் கழித்து 10 லட்சம் வேண்டும் என்றால், அவர் மாதம் செய்ய வேண்டிய முதலீட்டில் பெரிய வேறுபாடு இருக்காது. 7%க்கும் 15%க்கும் பெரிய வேறுபாடு ‘தெரியாது'.

ஆனால், 30 வருடம் கழித்து 20 லட்சம் வேண்டும் என்றால், 7% வருமானத்தில் மாதம் 1639 ரூபாய் கட்ட வேண்டும். 15% வருமானத்தில் மாதம் 289 ரூபாய் கட்ட வேண்டும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பெரியது.

10 அல்லது 20 வருடம் கழித்து 5000 ரூபாய் என்பது இப்பொழுது 500 ரூபாய் போல ஆகிவிடும். இப்பொழுதே யோசித்துப் பார்த்தால், 1988ல் 50 ரூபாய்க்கு இருந்த மதிப்பு இப்போது 500 ரூபாய்க்கு இருக்கிறது. இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


சில வருடங்களுக்கு ஒரு முறை இவற்றை சரி பார்க்க வேண்டும். 20 வருடம் கழித்து திருமண செலவு 18 அல்லது 20 லட்சம் என இப்போது தோராயமாகத்தான் சொல்ல முடியும். அது நெருங்க நெருங்க , துல்லியமாக சொல்லலாம். அதனால் நடு நடுவே இவற்றை சரி செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் course correction என்று சொல்லுவார்கள். தமிழில், ‘போகும் பாதையை திருத்திக் கொள்ளுதல்' என்று சொல்லலாம்.

பலருக்கும் அவர்களது இலக்கு தெரியும். இந்தப்பாதையில் இவ்வளவு வேகத்தில் சென்றால் இவ்வளவு நாட்களில் இலக்கை அடையலாம் என்று திட்டமிட வேண்டும். நமது இலக்கும், சூழ்நிலைகளும் மாறினால், பாதையை மாற்ற வேண்டும்.

வருமானமும், நாம் போட்ட கணக்குப்படி எல்லாம் நடக்காது. அதையும் இப்படித்தான் தோராயமாக இப்பொழுது கணக்கிட்டு 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அதே சமயம் அடிக்கடி (மாதாமாதம்) சரிபார்க்க ஆரம்பித்தால், நிம்மதி இருக்காது.

Saturday, March 29, 2008

பரஸ்பர நிதி . டிவிடெண்ட் மறு முதலீடு (Dividend Reinvestment)

பரஸ்பர நிதியில் டிவிடெண்டை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. டிவிடெண்ட் 2. டிவிடெண்ட் மறு முதலீடு 3. குரோத் (வளர்ச்சி)

பரஸ்பர நிதிகள் எவற்றில் முதலீடு செய்யும் என்பதைப் பொறுத்து 'Diversified Equity Funds' (பரவலான பங்கு வாங்கும் நிதி), 'Debt Funds' (வைப்பு நிதி-பரஸ்பர நிதி), 'Balanced Funds or Hybrid Funds (கலப்பு நிதி, அதாவது பங்கில் கொஞ்சம் முதலீடு, வைப்பு நிதியில் கொஞ்சம் முதலீடு) என்றும் பிரிக்கலாம்.

டிவிடெண்ட் தரும்பொழுது எவ்வளவு வரும்?, நிதியை விற்கும் பொழுது எவ்வளவு வரும்? இவற்றிற்கு எவ்வளவு வரி? என்பது பரஸ்பர நிதியின் வகையைப் பொறுத்தது. நீங்கள் எவ்வளவு நாள் வைத்திருந்து விற்றீர்கள் என்பதையும் பொறுத்தது.

“எனக்கு இதெல்லாம் வேண்டாம், எது நல்லது என்பதை மட்டும் சொல்” என்றால், ‘குரோத் வகையை எடுங்கள், 3 வருடத்திற்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்' என்று சொல்வேன். நீங்கள் இந்தப் பதிவை தொடர்ந்து படித்து குழம்பிக்கொள்ள வேண்டாம்.

“சரி, இருந்தாலும் எனக்கு விவரங்கள் தெரிய வேண்டும். நான் குழம்பிக்கொள்ள மாட்டேன் (அல்லது குழம்புவது எனது உரிமை)” என்றால், தொடர்ந்து படிக்கவும்.



இங்கே முதலில் சுருக்கமாக அட்டவணையிலும், அதன் கீழே விளக்கமாகவும் கொடுக்கிறேன்.
அதில், சில சந்தர்ப்பங்களில் டிவிடெண்ட் முறையில் லாபம் அதிகம் என்பதும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குரோத் முறையில் லாபம் அதிகம் என்பதும் விளங்கும். எந்த சமயத்தில் டிவிடெண்ட் முறை லாபம் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது என்பதும் விளங்கும்.

வருமான வரி விவரம் (Income Tax Details)








வகை எவ்வளவு நாள் முதலீடு (எப்போது விற்பனை, எப்போது வாங்கினீர்கள்) வருமான வரி
பங்கு பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு குறைவு (குறுகிய காலம்) லாபத்தில் 15%
பங்கு பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு மேல் (நெடுங்காலம்) வரி இல்லை
வைப்பு நிதி பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு குறைவு (குறுகிய காலம்) லாபம், உங்கள் சாதாரண வருமானத்துடன் சேர்க்கப்படும். வரி 0% முதல் 30% வரை போகலாம்
வைப்பு நிதி பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு மேல்(நெடுங்காலம்) லாபத்தில் 10 அல்லது 15% (பட்ஜெட்டிற்கு பிறகு சரியாகத் தெரியவில்லை)


டிவிடெண்ட் பற்றிய விவரங்கள்:




வகை டிவிடெண்ட் வரி
பங்கு பரஸ்பர நிதி வரி இல்லை
வைப்பு நிதி-பரஸ்பர நிதி மொத்த டிவிடெண்டில் 15% ***. லாபத்தில் அல்ல


***டிவிடெண்டில் 15% (சரியாகச் சொன்னால் 14.16%)வரி என்றால், உங்களுக்கு டிவிடெண்டு கொடுப்பதற்கு முன்னாலேயே, நிறுவனம் அரசுக்கு கட்டி விடும். உங்களுக்கு வரும் டிவிடெண்டுக்கு நீங்கள் வருமான வரி கட்ட வேண்டாம்.

கலப்பு நிதி, துறைசார் நிதி: இவற்றில் 65% மேல் பங்கில் முதலீடு செய்திருந்தால், அவை பங்கு பரஸ்பர நிதி என்று கருத்தப்படும். இல்லாவிட்டால் ‘வைப்பு நிதி-பரஸ்பர நிதி' என்று கருதப்படும். இதை வைத்தே வருமான வரியும், டிவிடெண்ட் வரியும் கணக்கிடப்படும்.

இப்படி வரும் டிவிடெண்டில் மீண்டும் பரஸ்பர நிதி வாங்கினால், “டிவிடெண்ட் மறு முதலீடு” (Dividend Reinvestment) என்று பெயர்.

டிவிடெண்ட் வேண்டாம், என்றால், ‘குரோத்' அல்லது வளர்ச்சி வகை பரஸ்பர நிதி ஆகும்.பெரும்பாலும் எல்லா நிதிகளிலும் டிவிடெண்ட் மற்றும் குரோத் வகைகள் உள்ளன. பல நிதிகளில் டிவிடெண்ட் மறு முதலீடும் இருக்கின்றன.

1. பரஸ்பர நிதியில் இரண்டு வகை (பங்கு பரஸ்பர நிதி, வைப்பு நிதி-பரஸ்பர நிதி).
2. அதற்கேற்றாற் போல டிவிடெண்டிற்கு வரி.
3. பரஸ்பர நிதியை விற்றால், லாபத்திற்கு எவ்வளவு வருமான வரி என்பது எந்த வகைப் பங்கு, எவ்வளவு நாள் கழித்து விற்றோம் என்பதைப் பொருத்தது.
4. பங்கு வகை பரஸ்பர நிதியின் மதிப்பு அடிக்கடி ஏறும், இறங்கும்.
5. டிவிடெண்ட் வருவதெல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி. “எப்போ வரும், எவ்வளவு வரும்” என்று யாருக்கும் தெரியாது. குறிப்பாக பங்கில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியில் இதை சொல்ல முடியாது. Fund manager நினைத்தால் உண்டு, இல்லாவிட்டால் இல்லை.

இதை நினைவில் வைத்து ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஒரு பரஸ்பர நிதி பங்கில் முதலீடு செய்கிறது. இன்று அதன் மதிப்பு ரூ 100. 6 மாதத்தில் 120 ஆகிறது. ஒரு வருடத்தில் 90 ஆகிறது. இரண்டு வருடத்தில் 150 ஆகிறது. மூன்றாவது வருடத்தில் 160 ஆகிறது. இது சகஜம்.

இதை குரொத்தில் வாங்கினால்: இதை மூன்று வருடம் கழித்து விற்றால் 60 ரூபாய் லாபம். இரண்டு வருடத்தில் விற்றால் 50 ரூபாய் லாபம். ஒரு வருட முடிவில் விற்றால் 10 ரூபாய் நட்டம். இவை எதற்கும் வருமான வரி கிடையாது.
ஆனால், 6 மாதத்தில் விற்றால் 20 ரூபாய் லாபம். அதில் 15% (அதாவது 3 ரூபாய்) வருமான வரி. மொத்தம் 17 ரூபாய் லாபம்.

இதை டிவிடெண்டில் வாங்கினால்: எப்போது டிவிடெண்ட் தருவார்கள் என்று சொல்ல முடியாது. வாங்கி ஒரு நாளில் 20 ரூபாய் டிவிடெண்ட் தருவதாக வைத்துக் கொள்வோம். உடனே உங்கள் பங்கின் மதிப்பு 100 லிருந்து 80 ஆகி விடும். உங்கள் டிவிடெண்டிற்கு டிவிடெண்ட் வரியோ வருமான வரியோ இல்லை.

6 மாதத்தில் 100 ரூபாய் குரோத் நிதி 120 ஆகி இருக்கிறது. 80 ரூபாய் டிவிடெண்ட் நிதி 96 ரூபாய் ஆகி இருக்கும். இப்போது விற்றால்?

உங்கள் லாபம் 16 ரூபாய். அதில் வரி 15% அதாவது 2.4 ரூபாய். விற்பதில் நிகர லாபம் 13.6 ரூபாய். முதலில் 20 ரூபாய் டிவிடெண்டும், இப்போது 80 + 13.6 ரூபாயும் கிடைக்கிறது.

அது மட்டும் இல்லை. நீங்கள் வாங்கிய பொழுது 100 ரூபாய் ஆனது, இப்போது 96 ரூபாய் என்பதால், 4 ரூபாய் நட்டம் என்று கணக்கு காண்பிக்கலாம். (இதற்கு ஒரு விதி இருக்கிறது. டிவிடெண்ட் வருவதற்கு 3 மாதம் முன்போ, அல்லது 3 மாதம் கழித்தோ விற்றால்தான் இப்படி கணக்கி காண்பிக்க முடியும். டிவிடென்ட் வருவதற்கு முந்திய நாள் வாங்கிவிட்டு, டிவிடெண்டை பெற்றுக் கொண்டு, அடுத்த நாள் விற்று நட்டக்கணக்கு காண்பிக்க முடியாது).

வேறு வகையில் பங்கை விற்று உங்களுக்கு 4 ரூபாய் குறுகிய கால லாபம் வந்தால்,அதில் 15% வரி (0.6 ரூபாய்) கட்ட வேண்டி இருக்கும். இந்த நட்டத்தை வைத்து சரிக்கட்டினால், அந்த 0.6 ரூபாய் மிச்சமாகும். ஆக மொத்தம் 13.6 ரூபாய் நிச்சய லாபம், 14 ரூபாய் வரை லாபம் பார்க்க வழி உண்டு.

அப்படி இந்த வருடம் வேறு எதுவும் குறுகிய கால லாபம் இல்லை என்றால், அடுத்த வருடத்திற்கு இந்த 4 ரூபாய் நட்டத்தை எடுத்துச் செல்லலாம்.

இப்படி 6 மாதத்தில் விற்றால் குரோத்தில் 17 ரூபாயும், டிவிடெண்டில் 13.6 அல்லது 14 ரூபாயும் வருமானம் எனத் தெரிகிறது.


நீங்கள் 6 மாதத்தில் விற்காமல், 1 வருடத்தில் விற்றால்? 100 ரூபாய் 90 என ஆகிறது. 80 ரூபாய் 72 என ஆகும். இப்போது உங்கள் நட்டம் 8 ரூபாய் மட்டுமே. ஏனென்றால், முன்னர் 20 ரூபாய் டிவிடெண்ட்.இப்போழுது விற்றால் 72 ரூபாய். மொத்தம் 92 ரூபாய்.

இப்படி 1 வருடத்தில் விற்றால் குரோத்தில் 10 ரூபாய் நட்டம், டிவிடெண்டில் 8 ரூபாய் நட்டம்.

நீங்கள் 2 வருடத்தில் விற்றால்.(அதற்கு பின் டிவிடெண்ட் கொடுக்கவில்லை என நினைத்துக் கொள்ளவும்). 100 ரூபாய் 150 ஆனால், 80 ரூபாய் 120 ஆகும்.

குரோத்தில் 50 ரூபாய் லாபம். (வரி இல்லை). டிவிடெண்ட் வகையில் 120 + முதலில் வாங்கிய 20 ரூபாய் = 140. அதாவது 40 ரூபாய் லாபம் (இங்கும் வரி இல்லை).


நீங்கள் 3 வருடத்தில் விற்றால். 100 ரூபாய் 160 ஆனால் , 80 ரூபாய் 128 ரூபாய் ஆகும்.

குரோத்தில் 60 ரூபாய் லாபம். டிவிடெண்டில் 128+20 = 148. அதாவது 48 ரூபாய் லாபம்.

இப்படி பல நிலைமைகளை ஆராயலாம். நாலு மாதத்தில் 10 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்தால், என்ன ஆகும்? அதே 10 ருபாய் இல்லாமல் 5 ரூபாய் கொடுத்தால் என்ன ஆகும்? பரஸ்பர நிதி ஒரு வருடத்தில் 120 ஆகுமா அல்லது 110 ஆகுமா?

மண்டையைக் குழப்பிக்கொள்ள இது சிறந்த வழி.


"இல்லை, குழம்பவில்லை” என்றால், அடுத்து வருவது டிவிடெண்ட் மறு முதலீடு.

போன உதாரணத்தில், உங்கள் டிவிடெண்டான 20 ரூபாயை அப்படியே வைத்துக் கொண்டு விட்டோம். அதையும், பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் என்ன ஆகும்? அது குரோத் போலவே வரும். இதற்கும் குரோத்திற்கும் வித்தியாசம் இருக்காது.

இங்கு உடனே (மறுநாளே) டிவிடெண்ட் தந்ததாக கற்பனை செய்தோம். அதற்கு பதில் 6 மாதம் கழித்து டிவிடெண்ட் தந்து அந்த டிவிடெண்டை மறு முதலீடு செய்தால்? அப்போது, முதலில் வாங்கிய யூனிட்டுகள் இன்று வாங்கியதாகவும், டிவிடெண்ட் மறு முதலீட்டில் வாங்கிய யூனிட்டுகள் 6 மாதத்தில் வாங்கியதாகவும் இருக்கும்.

எல்லாவற்றையும் 1 வருடத்தில் விற்றால்? முதலில் வாங்கிய யூனிட் லாபத்திற்கு ‘நெடுங்கால வரி' (பூஜ்யம்)யும் டிவிடெண்ட் மறு முதலீட்டில் வந்த யூனிட்டிற்கு ‘குறுகிய கால வரி' (15%)யும் கட்ட வேண்டும்.

இதை எல்லாம் பார்த்த பிறகு மூளையை சரியாக்க ஒரு சைக்காலஜிஸ்டையும், வருமான வரியைக் கட்ட ஒரு அக்கவுண்டண்ட்டையும் தேட வேண்டும். இதெல்லாம் தேவையா?



இதெல்லாம் வேண்டாம் என்றால், பங்கு-பரஸ்பர நிதியில் குரோத்தில் போடுவதுதான் நல்லது. சில வருடங்களுக்கு தொடக்கூடாது.


வைப்பு நிதி-பரஸ்பர நிதியில் போடுபவர்களுக்கும், அவர்கள் வருமான வரி நிலைமையைப் பொறுத்து டிவிடெண்ட் அல்லது குரோத் பொறுத்தமாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இந்த வைப்பு நிதி பரஸ்பர நிதி தேவையில்லை என்பது என் கருத்து.

Friday, March 28, 2008

பரஸ்பர நிதியில் செலவு(நட்டம்) (Mutual Fund Expenses)

பரஸ்பர நிதியை நாம் வாங்கும் பொழுது, நூறு ரூபாய்க்கு வாங்கினால், எல்லா சமயத்திலும் நமக்கு நூறு ரூபாய்க்கான யூனிட்டுகளைத் தருவதில்லை. பல சமயங்களில் ‘இந்த செலவு, அந்த செலவு' என்று கணக்கு காண்பித்து 97 ரூபாய், 98 ரூபாய்க்கான யூனிட்டுகளைத்தான் தருவார்கள். அதை விற்றாலும், உடனே நமக்கு 97 அல்லது 98 ரூபாய் வராது. அதிலும் ‘விற்கும் செலவு' என்று கணக்கு காண்பிப்பார்கள். இதன் விவரங்களை கீழே பார்க்கலாம்.

சில செலவுகள் தவிர்க்க முடியாதவை. சில தவிர்க்கக் கூடியவை. எல்லா செலவுகளையும் அவர்கள் கண் முன் காண்பிப்பதில்லை. சில தெளிவாகத் தெரியும், சிலவற்றை வருடாந்திர அறிக்கையின் உள்ளே புதைத்து வைத்து இருப்பார்கள். எது என்ன என்ற விவரத்தை ஒரு முறை தெளிவாகத் தெரிந்து கொள்வது நமக்கு நல்லது.

இந்த செலவுகள் அனைத்திலும் நமக்கு இழப்பு என்பதால் தலைப்பில் ‘நட்டம்' என எழுதி இருக்கிறேன். பரஸ்பர நிதி வாங்கினாலே நட்டம் என நினைக்க வேண்டாம்.


  1. Entry Load. (நுழையும்?) வாங்கும் செலவு. பரஸ்பர நிதிகளை வாங்கும்பொழுது உங்களுக்கு வாங்கித்தரும் எஜண்ட் கமிஷன். இது பல சமயங்களில் 2% முதல் 2.5% வரை இருக்கும்.
    • உதாரணமாக , பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளில், இது 2 முதல் 2.5% வரை இருக்கும். ஆனால், index fund எனப்படும் பரஸ்பர நிதி யில் குறைவாக இருக்கலாம். 1% அல்லது பூஜ்யமாகவும் இருக்கும். (இவையும் பங்குகளில்தான் முதலீடு செய்யும். பெரிய கம்பெனியில் மட்டும் முதலீடு செய்யும். அடிக்கடி பங்குகளை வாங்கி விற்க மாட்டார்கள்)
    • வைப்பு நிதியில் முதலீடு செய்யும் Debt fundsஇல் இது 1% அல்லது 0% ஆக இருக்கும். பெரும்பாலும் 0% ஆகத்தான் இருக்கும்.

    பங்கில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியானாலும் (Equity funds) வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி (Debt fund) ஆனாலும், வேறு (கலப்பு நிதி, துறைசார் நிதி) என எந்த வகை நிதி ஆனாலும், நேரடியாக நீங்கள் நிதியை வாங்கினால், இந்த கமிஷன் எடுக்க மாட்டார்கள். இது சமீபத்தில் அரசு உத்தரவுப் படி நடக்கிறது (அரசு உத்தரவு என எளிமையாக்கி சொல்கிறேன். இல்லாவிட்டால், SEBI என்றால் என்ன, அதற்கும் அரசிற்கும் உள்ள தொடர்பு என முடிவில்லாமல் எழுதிக்கொண்டே போகவேண்டி இருக்கும்). இதற்கு முன் (2007 வரை), நீங்கள் நேரடியாக வாங்கினால் கூட 'ஏஜண்ட் கமிஷனாகிய இந்த செலவை' விற்கும் நிறுவனமே வெட்கமில்லாமல் நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டது.

    உங்களுக்கு ஒரு ஏஜண்ட் வந்து, (அ) பரஸ்பர நிதிகளின் விவரங்களை எடுத்துக் கூறி, (ஆ) உங்கள் தேவைகளைக் கணக்கில் கொண்டு, ‘இந்த நிதியில் முதலீடு செய்யுங்கள்' என உங்கள் நன்மையை முதலில் வைத்து சொன்னால் (அதாவது என்னைப்போல இருந்தால் :-) ), அவர் உங்களுக்கு உதவி செய்கிறார். குறைந்த பட்சம் உங்களுக்கு விண்ணப்ப படிவத்தை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து நீங்கள் நிரப்பியதை சரிபார்த்து நிறுவனத்திற்கு எடுத்து சென்றால், கொஞ்சமாவது உதவி செய்கிறார். அவருக்கு கமிஷன் கொடுப்பது சரியானது. நாமே ஆராய்ந்து முடிவுக்கு வந்து பரஸ்பர நிதியை வாங்கும்பொழுது, நிறுவனங்கள் ஒன்றுமே செய்யாமல் நம் பணத்தை எடுத்து தங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொளவது எந்த வகையில் நியாயம்? அதனால்தான் நிறுவனங்கள் வெட்கமில்லாமல் எடுத்துக்கொண்டன என்று சொல்கிறேன்.

    ஒவ்வொரு பரஸ்பர நிதியிலும், இது ”entry load" இவ்வளவு என்று வெளிப்படையாகத் தெரியும் படி கொடுத்திருப்பார்கள்.


  2. Exit Load, (வெளியேறும்)விற்கும் செலவு. இது விற்கும் செலவு எனபதற்கு பதிலாக, ‘விற்பதற்கான தண்டனை' என்று சொல்லலாம். பெரும்பாலான நிறுவனங்கள் வாங்கும் செலவு பூஜ்யம் என்று சொன்னால், விற்கும் செலவில் தீட்டி விடும். இவையும் பங்கு-பரஸ்பர நிதிகளிலும், வைப்பு நிதி பரஸ்பர நிதிகளிலும் இருக்கும். பெரும்பாலும் 0% என்று இருந்தாலும், சில சமயங்களில் இது 1 அல்லது 2% ஆக இருக்கும்.

    பல சமயங்களில் இது condition உடன் வரும். அதாவது நீங்கள் ஒரு பரஸ்பர நிதியை வாங்கி 6 மாதத்திற்குள் விற்றால் அல்லது 3 மாதத்திற்குள் விற்றால், அல்லது 1 வருடத்திற்குள் விற்றால், விற்கும் செலவு என்ற பெயரில் 1% அல்லது 2% தர வேண்டி இருக்கும். அந்த காலக் கெடுவை தாண்டி விட்டால், இது பூஜ்யம் ஆகிவிடும்.

    எனது கருத்துப்படி நீங்கள் 3 வருடத்திற்கு பரஸ்பர நிதியை வைத்திருந்தால், ஏறக்குறைய எல்லா நிதிகளிலும் இது பூஜ்யம் ஆகிவிடும். அதனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

    விற்கும்பொழுது நிறுவனத்திற்கு செலவு என்று ஒன்றும் கிடையாது. ஆனால், அவற்றின் திட்டம் நெடுங்காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும். நாம் உடனடியாக பணத்தை கேட்டால் அதற்கு penalty ஆக கொஞ்சம் எடுத்துக்கொள்வார்கள். இது ஓரளவு நியாயம் என நினைக்கிறேன்.

    எடுத்துக்காட்டாக, ஒரு நண்பரும் நீங்களும் சேர்ந்து பணம் போட்டு வியாபாரம் செய்கிறீர்கள். உங்கள் திட்டப்படி, ஆளுக்கு 1 லட்சம் போட்டு தொடங்குகிறீர்கள். ஆரம்பித்த மறு நாளே லாபம் வராது. ஒரு வருடம் கழித்துதான் போட்ட பணமே திரும்ப எடுக்க முடியும். இரண்டாம் ஆண்டிலிருந்து ஓரளவு லாபம் வரும் என்று கணக்கிடுகிறீர்கள்.

    6 மாதத்தில், நண்பர் வந்து ‘எனக்கு இது வேண்டாம் என்று தோன்றுகிறது. எனது ஒரு லட்சத்தை கொடுத்து விடு' என்று சொன்னால் என்ன சொல்வோம்? ‘இன்னம் ஆறு மாதம் பொறு, போட்ட பணத்தை எடுத்து விடுவோம். உனக்கும் எனக்கும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம்.' என்று சொல்வோம். நண்பர் ‘இல்லை, இப்பொழுதே கொடு' என்று கேட்டால் வியாபாரத்தை இழுத்து மூடி, வந்த பணத்தை பிரித்துக் கொள்வோம். அப்போது, போட்ட பணத்தைவிட கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.

    அதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை திரும்ப எடுத்தால், கொஞ்சம் penalty கொடுப்பது அநியாயமாக எனக்கு தோன்றவில்லை.

    ஒவ்வொரு பரஸ்பர நிதியிலும் இதுவும் வெளிப்படையாக ‘விற்கும் செலவு இவ்வளவு' என்று கொடுத்திருப்பார்கள்.

    அரசின்விதிப்படி, வாங்கும் செலவும் விற்கும் செலவும் சேர்த்து 6%க்கு மேல் போகக்கூடாது. ஏதோ நம் நல்ல நேரம், இதுவரை 2.5% அல்லது 3.5% மேல் நிறுவனங்கள் கேட்கவில்லை. அரசு அனுமத்தித்து இருக்கிறதே என்று மேலும் தீட்டவில்லை


  3. CDSC இதுவும் மேலே சொன்ன Exit load/ விற்கும் செலவு போன்றது. இதன் விரிவு Contingent Deferred Sales Charge. தமிழில் மொழி பெயர்க்கும் அளவு முக்கியமானது இல்லை. இப்பொழுது பெரும்பாலும் நிறுவனங்கள் இதை வாங்குவதில்லை. 'விற்கும் செலவு' என்று மொத்தமாக சொல்லி விடுகிறார்கள். இதுவும், 6 மாதத்திற்குள் விற்றால் 1%, ஒரு வருடத்திற்குள் விற்றால் 0.5% என்று இருக்கும். பல வருடங்கள் வைத்திருப்பவர்களுக்கு கவலை இல்லை.

    இதுவும் வெளிப்படையாகக் கொடுத்திருப்பார்கள். இது கொடுக்காவிட்டால், இது பூஜ்யம் (அல்லது விற்கும் செலவில் சேர்க்கப்பட்டு விட்டது) என அறிந்து கொள்ளலாம்.

  4. Expenses , மற்ற செலவுகள் இது பரஸ்பர நிதி நிறுவனம், ஆபிஸ் நடத்துவதற்கான செலவு. ஆபிஸில் வாடகை அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளம் இதையெல்லாம் நாம்தான் கொடுக்க வேண்டும். குறிப்பாக, நமது பரஸ்பர நிதியை நடத்துபவர் (Fund Manager) சம்பளம் இதிலிருந்துதான் போடும். இது ஒவ்வொரு நிதியிலும் ஒவ்வொரு ஆண்டிலும் மாறும்.

    இது எவ்வளவு என்பது வெளிப்படையாகத் தெரியாது. தோண்டித் துருவிப் பார்த்தால்தான் தெரியும். இது 1% அல்லது கீழே இருப்பது நல்லது. சில பரஸ்பர நிதிகள் சிறிய கம்பெனிகளில் (small cap) முதலீடு செய்யும். அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து நல்ல கம்பெனியை தேர்ந்தெடுப்பது கொஞ்சம் கடினம் என்பதால், அப்படிப்பட்ட பரஸ்பர நிதிகள் expenseஐ அதிகமாக எடுத்துக் கொள்ளும்.


  5. புது ஃபண்ட் செலவு (New Fund Offer or NFO expenses) புதிதாக ஃபண்ட் ஆரம்பிக்கும்பொழுது Initial Expenses அதாவது ”தொடங்கும் செலவுகள்” என்று கொஞ்சம் பணம் எடுத்துக்கொள்வார்கள். பழைய நிதியை அதிகம் விளம்பரம் செய்ய வேண்டியதில்லை. புதிய நிதி வருவது பற்றி எல்லோருக்கும் தெரிவிக்க விளம்பரம் செய்ய வேண்டும், எஜண்டுகளுக்கு சொல்ல வேண்டும் என்பது போன்ற செலவுகள் இதில் அடங்கும்.
    • பெரும்பாலும் புது நிதிகளில் வாங்கும் செலவு (entry load) இருக்காது. ஆனால், அதற்கு பதில் இந்த தொடங்கும் செலவு இருக்கும். இது ”வாங்கும் செலவை” விட அதிகமாக இருக்கும்.
    • நீங்கள் பழைய நிதியை நேரடியாக வாங்கினால், ‘வாங்கும் செலவு' கிடையாது. புதிய நிதியை நேரடியாக வாங்கினாலும், ஏஜண்ட் மூலம் வாங்கினாலும் ‘தொடங்கும் செலவு' உண்டு. 'புதிய நிதியை வாங்க வேண்டாம்' என்று நான் சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்



சுருக்கமாக,











செலவு வகை அளவு வெளிப்படையாகத் தெரியுமா? தவிர்க்க முடியுமா? மற்ற விவரங்கள்
நுழையும்/ வாங்கும் செலவு (Entry Load) 0% முதல் 2.5% வரை தெரியும் நேரடியாக வாங்கினால் இந்த செலவு இல்லை
வெளியேறும்/விற்கும் செலவு (Exit Load) 0% முதல் 2% வரை தெரியும் குறிப்பிட்ட காலம் கழித்து (1 வருடம் அல்லது 6 மாதம் கழித்து) விற்றால் இந்த செலவு இல்லை
CDSC 0% முதல் 1% வரை தெரியும். இது கொடுக்காவிட்டால், இதை ‘விற்கும் செலவில்' சேர்த்திருக்கிறார்கள் என்று பொருள் குறிப்பிட்ட காலம் கழித்து (1 வருடம் அல்லது 6 மாதம் கழித்து) விற்றால் இந்த செலவு இல்லை
தொடங்கும் செலவு (initial expense) 4% வரை தெரியாது தவிர்க்க முடியாது NFO வாங்காமல் இருப்பதுதான் நல்ல வழி


இந்த செலவு விவரங்களை எல்லாம் நாம் ஆர்வமாக இருக்கும்பொழுது ஒவ்வொரு நிதியிலும் எவ்வளவு என்று படிப்போம். இதே துறையில் ஈடுபடுவர்களுக்கு சில மாதங்களில் எந்த நிதியில் எந்த செலவு என்பது அத்துப்படி ஆகிவிடும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் முதலில் ஆர்வம் இருந்தாலும், பின்னர் குழப்பமே மிஞ்சும்.

அதனால், (அ) புதிய ஃபண்ட் களை வாங்க வேண்டாம். (ஆ) முதலீட்டை 3 வருடங்களுக்கு விற்க வேண்டாம் (இ) முடிந்தால், நேரடியாக நிறுவனத்திடம் வாங்கவும். இது ஒவ்வொரு பரஸ்பர நிதிக்கும் ஒரு முறை செய்ய வேண்டும். கொஞ்சம் தொல்லை பிடித்த வேலை என்றாலும், உங்களுக்கு பயனளிக்கும். குறிப்பாக, 15 அல்லது 20 வருடம் பணம் எடுக்க மாட்டேன், இது நெடுங்கால முதலீடு என்று நினைப்பவர்களுக்கு இது முக்கியம். நீங்கள் 3 அல்லது 5 வருடத்தில் எடுத்துவிட்டால், எஜண்ட் மூலம்போவதில் அவ்வளவு இழப்பு இல்லை. கொஞ்சம்தான் இழப்பு. இது இல்லாவிட்டால், entry load வாங்காத சில ஃபண்ட்கள் இருக்கின்றன. அவற்றை வாங்கலாம். (ஈ)expense அதிகம் இல்லாத பரஸ்பர நிதி எது என்று பார்த்து வாங்குவது கடினம். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் இது மாறும். ஏறக்குறைய எல்லா நிதிகளிலும் இது 1% இருப்பதால், இதை யோசித்து நேரத்தை வீணாக்க்காமல், போனால் போகட்டும் என்று விட்டு விடுவது நலம்.

நமக்கு ஒரு செலவைக் குறைக்க சுலபமான வழி இருந்தால் அதைக் கடைப்பிடிப்போம். வழி மிகக் கடினமானது, நாம் அடிக்கடி பார்த்து யோசித்து முடிவெடுக்க வேண்டி இருக்கும் என்றால் , பேசாமல் செலவை ஏற்றுக்கொள்வோம். இதுதான் நீண்ட காலத்தில் நமக்கு உகந்தது, நம்மால் செய்யக்கூடியது.

Thursday, March 27, 2008

நிதித் திட்டமிடுதல். எடுத்துக்காட்டு 1a. (Financial Planning, Example)

ஒரு எடுத்துக்காட்டு. 30 வயதான ஒருவர், மாதம் 20000 ரூபாய் சம்பாதிக்கிறார். 60,65 வயதான் பெற்றோர். மற்றும் மனைவி, ஒரு குழந்தை (5 வயது). மனைவி வேலைக்கு போகவில்லை. பெற்றோருக்கு பென்ஷன் போல எந்த வருமானமும் இல்லை. இவர் அரசாங்க வேலை பார்த்தால் இவரது வேலை போகாது. வருமானம் நிலையானது.

இவர் பண விஷயங்களைப் பற்றி எவ்வாறு திட்டமிட வேண்டும்?

தற்போதைய மாத வருமானமும் செலவும். இவர்களுக்கு மாத செலவு. வீட்டு வாடகை 7000 ரூபாய், உணவு 3000 ரூபாய், துணி, குழந்தை பள்ளி செலவு, வண்டிக்கு பெட்ரோல் இதர செலவுகள் 5000 ரூபாய். ஆபிசில் பி.எஃப்.இல் 3000 ரூபாய் போடுகிறார். மீதி 2000 ரூபாய் தேறும். இது சேமிப்பு என எடுத்துக் கொள்வோம்.








விவரம் செலவு
வீட்டு வாடகை7000
உணவு3000
இதர செலவுகள் 5000
பிராவிடண்ட் ஃபண்ட் 3000
சேமிப்பு 2000

( நான் இங்கு எழுதும் எண்கள் மிக மிகத் தோராயமானவை. வழி முறையை மட்டுமே கவனிக்கவும். ”இந்த சம்பளம் சரியில்லை, இந்த செலவுக்கணக்கு சரியில்லை, நாட்டு நடப்பு உனக்கு தெரியாதா” என்று சண்டைக்கு வர வேண்டாம்)

தற்போதைய சொத்து சேமிப்பு வங்கியில் 10000 ரூபாய் இருக்கிறது. நகைகளாக 20 பவுன் (160 கிராம்) தங்கம் இருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் 1.6 லட்சம்.

இது தவிர சொத்து என்று எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் எடுக்கவில்லை.


திட்டமிடுதல்.

1. முதலில் அவர் வங்கியில் சேமிப்பு கணக்கில் 30,000 ரூபாய் போட்டு வைக்க வேண்டும்.
இரண்டு மாத செலவுக்கான பணம் இருக்கும்.

2. வைப்பு நிதியில் 1 லட்சம் போட வேண்டும். இப்பொழுது பணம் இல்லையென்றால், 10 மாதம் பணம் சேர்த்து 50 ஆயிரம் அளவாவது போட வேண்டும். பெற்றோருக்கு, அல்லது
குடும்பத்தில் யாருக்காவது திடீரென உடல் நலம் குறைந்தால் இது தேவைப்படும்.

3. உடனடியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். Term Insurance எனப்படும் காப்புதான் உகந்தது.

பின்னர், ஒரு வருடம் கழித்து வைப்பு நிதியில் பணம் போட்ட பிறகு, அடுத்து சேமிக்கும் பணத்தை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். அதற்கு தேவையான விவரங்கள்:

எதிர்கால செலவுகள் பற்றி திட்டமிடுதல்

முதலில் நமது எதிர்பார்ப்பு அல்லது ஆசைகளைப் அளவாகப் பட்டியலிட வேண்டும்.

1. ஒரு ஐந்து அல்லது பத்து வருடங்களில், பெற்றோருடைய மருத்துவ செலவுக்கு ஓரிரு லட்சம் தேவைப்படலாம். அப்போது , வைப்பு நிதியை பயன்படுத்திய பின், மறுபடி சேமித்து போட வேண்டும். தவிர, மருத்துவ செலவும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், 10 வருடம் கழித்து இந்த ஒரு லட்சம் பத்தாது. 10 வருடம் கழித்து அது 2 லட்சம் என வைக்க வேண்டும்.

2. 10, 12 வருடம் கழித்து குழந்தை கல்லூரி செலவு வரும். இப்பொழுது தனியார் கல்லூரியில் பொறியாளர் ஆக, ஆண்டுக்கு 1 லட்சம் செலவு (தோராயமாக). அரசு
கல்லூரியில் படித்தால் 20,000 ஆகும். ”எப்படியாவது” நம் மகன்/மகளை பொறியாளர் ஆக்க வேண்டும். 10,12 வருடத்தில் செலவு ஆண்டுக்கு 2 லட்சம் என வைத்துக் கொள்வோம்.
அப்போது, 8 லட்சம் தேவைப்படும்.

3. மகன்/மகளின் திருமண செலவு. இது இன்னும் 20 வருடங்களில் தேவைப்படும். இப்போதைய நிலவரத்தில், நாம் 6 லட்சத்தில் நடத்தலாம், 20 வருடம் கழித்து என்றால் 18 லட்சம் ஆகலாம்.

4. 30 வருடம் கழித்து நாம் ரிடையர் ஆகும்பொழுது, பென்ஷன் பி.எஃப் தவிர கையில் பணம் இருந்தால் நல்லது. மருத்துவ செலவுக்கு ஆகும். நம் மகன்/மகளுக்கு பாரமாக இருக்க வேண்டாம். இது எவ்வளவு என்றால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஒரு 20 லட்சம் இருந்தால் நல்லது.

5. நமக்குன்னு சொல்லிக்க ஒரு வீடு இருந்தால் பரவாயில்லை. இப்போது சென்னையில் வீடு விற்கும் விலையில் குறைந்த பட்சம் 40 லட்சம் ஆகும். நம் சொந்த ஊரில் 20 லட்சத்தில் நல்ல வீடு/பிளாட் கிடைக்கும். அது இன்றைய நிலவரம். இப்போது வீடு வாங்காமல், 5 வருடம் கழித்து வாங்கினால், அது 25 லட்சம் ஆகலாம்.














எண் தேவை ஆண்டுகள் பணத்தின் அளவு
1. மருத்துவ செலவுக்கு வைப்பு நிதியில் போட 10 1 லட்சம்
2. குழந்தை கல்லூரி செலவு 12 8 லட்சம்
3. குழந்தை திருமண செலவு 20 18 லட்சம்
4. ரிடையர் ஆகும்பொழுது கைக்காசு 30 20 லட்சம்
5. வீடு 5 25 லட்சம்
மொத்தம் தேவை 72 லட்சம்


சில விஷயங்களை இப்பொழுது பார்ப்போம்.

1. இப்போதே அவருக்கு லாட்டரியில் 72 லட்சம் கிடைத்தால் அவர் தேவைகள் முடிந்து விடும். (முடியாது, ஏனென்றால் அப்பொழுது எதிர்பார்ப்பும் செலவும் அதிகரிக்கும். இருந்தாலும்....)

2. வெளியில் கடன் வாங்காமல் இப்பொழுது இருக்கும் சம்பளத்தில் அவரால் இவ்வளவு தேவைகளையும் நிறைவேற்ற முடியாது என்று 'தோன்றுகிறது'. கணக்கு போட்டு பார்த்தால்தான் உண்மை தெரியும். முடியாது என்றால் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ள வேண்டும்.



எதிர்கால மாத வருமானம் மற்றும் செலவு

1. நமது வருமானம் இப்படியே இருக்காது. நமக்கு மேல் பதவி சில வருடங்களில் வரலாம். நமது மனைவி வேலைக்கு போனால், செலவு 2000 அதிகரிக்கும். வருமானம் மாதம் 10000
அதிகரிக்கும். மொத்தம் நிகர வருமானம் 8000. இப்போதைக்கு மனைவி வேலைக்கு போவதில்லை என வைத்துக் கொள்வோம்.

2. நமக்கே வருடா வருடம் , வருவாய் 10% (simple interest)அதிகரிக்கும் என கணக்கிடலாம். 10 வருடங்களுக்கு பிறகு, 40,000 வரும். அதன் பின் ஒவ்வொரு வருடமும் 4000 அதிகரிக்கும் என கணக்கிடலாம்.

3. மாத செலவும் கூடவே அதிகரிக்கும். அதனால், சேமிப்பு இப்போது மாதம் 2000 என்று இருப்பது, அடுத்த வருடம் (22000 - 19000) = 3,000 என்று மாறலாம். அதற்கு அடுத்த வருடம் 3500 என்று மாறலாம்.



இந்த நிலையில் அவர் தேவைகளை கணக்கிடுகிட்டு விட்டார். வருமானம் மற்றும் சேமிப்பு பற்றியும் ஓரளவு தெரிகிறது.

அடுத்த பதிவில் எவ்வளவு சம்பாதித்து, சேமித்தால் இவரது தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்று கணக்கிடுதல்.

Wednesday, March 26, 2008

பரஸ்பர நிதி (வைப்பு நிதி) (Debt Mutual Funds)

(மங்களூர் சிவா, உங்கள் கேள்வி/கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இப்பதிவு. இதை எழுதததூண்டியதற்கு நன்றி) .

பரஸ்பர நிதிகளில் பல வகைகள் உண்டு என்பதை முன்பு பார்த்தோம். சற்று எளிமைப் படுத்தினால்

  1. பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி. எல்லா வகைப்பங்க்குகளையும் வாங்கும் நிதிக்கு Diversified Equity Fund என்று பெயர். பங்குகள் விலை ஏறினால் இவற்றின் மதிப்பு ஏறும். இறங்கினால், இவற்றின் மதிப்பு இறங்கும்.
    • கடந்த மூன்று மாதங்களில் (ஜனவரி 2008 முதல் மார்ச் 2008 வரை) மார்க்கெட் சரிந்த பொழுது, இந்த வகைப் பரஸ்பர நிதிகளின் மதிப்பும் குறைந்திருக்கும்

  2. வைப்பு நிதி (Fixed Deposit)இல் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள். இவை பற்றி கீழே விவரமாகப் பார்க்கலாம்

  3. கலப்பு நிதிகள் (Hybrid funds or Balanced Funds). இவை கொஞ்சம் பங்குகளிலும் கொஞ்சம் வைப்பு நிதிகளிலும் முதலீடு செய்யும்.

  4. துறை சார் நிதி (Sector Funds). இவை பங்குகளிலேயே குறிப்பிட்ட துறை பங்குகளை மட்டும் வாங்கும்.



வைப்பு நிதி பரஸ்பர நிதி என்றால் என்ன?

முதலில், பெரும்பாலான மக்களுக்கு இது தேவையில்லை. நீங்கள் முதலீடு செய்ய இந்நிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்வம் இருந்தால் தொடர்ந்து படிக்கவும்.

உங்கள் பணத்தை வைப்பு நிதியில் (Fixed Deposit) போடலாம் என்றால், அதற்கு பல வங்கிகளில் போடலாம். ஒவ்வொரு வங்கியும் ஒரு வட்டி கொடுக்கும். State Bank of India ஒரு வருடத்திற்கு 8 சதவிகிதம் கொடுத்தால் இன்னொரு வங்கி 7 % கொடுக்கலாம்; மற்றும் ஒரு வங்கி 9% கொடுக்கலாம். கொஞ்சம் வேறுபாடு இருக்கலாம். இது தவிர கூட்டுறவு வங்கிகளும் வைப்பு நிதியில் 10% கூட கொடுக்கலாம். ஒரேடியாக எல்லோரும் 8% தரும் பொழுது ஒரு வங்கி 25% தராது.

இது தவிர சில கம்பெனிகளும் வைப்பு நிதிக்கு வட்டி கொடுக்கும். Cholamandala, ESSAR, (இன்னும் பல, எனக்கு மறந்து விட்டது) இவற்றிற்கு பணம் தேவைப்பட்டால், ஒன்று வங்கியிடம் சென்று கடன் கேட்கலாம். அல்லது பொதுமக்களிடம் கேட்கலாம். வங்கியில் கேட்டால் மிக அதிக வட்டிக்குதான் கடன் கிடைக்கும். அதற்கு பதில் பொதுமக்களிடம் 12% அல்லது 13% என்று கடன் வாங்கலாம்.

எல்லா கம்பெனிகளும் நினைத்தவுடன் இப்படி பொதுமக்களிடம் வாங்க முடியாது. சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் வாங்க வேண்டும். ஆனால் இவற்றில் வங்கிகளில் உங்களுக்கு கிடைக்கும் வட்டியை விட கொஞ்சம் அதிகம் கிடைக்கும். இல்லாவிட்டால் நீங்கள் இந்த நிறுவனங்களில் பணம் போடாமல் நேராக வங்கியில் போட்டுவிடுவீர்களே!

இந்த நிறுவனங்களில் வைக்கும் வைப்பு நிதிக்கு கொஞ்சம் பாதுகாப்பு குறைவு. அதாவது கம்பெனி திவாலானால், உங்கள் முதலுக்கு மோசம் வரலாம். ஆனால் வட்டி அதிகம்.

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால், 50 லட்சத்தை SBIஇல் 8% வட்டிக்கும், 30 லட்சத்தை கூட்டுறவு வங்கியில் 10% வட்டிக்கும், 10 லட்சத்தை ஒரு நிறுவனத்தில் 12% வட்டிக்கும், கடைசி 10 லட்சத்தை வேறு நிறுவனத்தில் 13% வட்டிக்கும் வைப்பு நிதியாக போடலாம். இதனால், மொத்த முதலும் போய் விடாது. அதேசமயம் வட்டியும் 8% விட கொஞ்சம் அதிகம் கிடைக்கும். தப்பித்தவறி ஒரு கம்பெனி திவாலானால், உங்கள் பணம் முழுதும் வராமல் , ஒரு 10% இழப்பில் கூட (10 லட்சம் என்பது வட்டியுடன் 11.2 அல்லது 11.3 லட்சம் வருவதற்கு பதில் 9 லட்சமாக வரும்) வரலாம். ஆனால், 1 கோடி பணத்தில், SBIஇல் 4 லட்சமும் (50 லட்சத்திற்கு 8% வட்டி ) , கூட்டுறவு வங்கியில் 3 லட்சமும் (30 லட்சத்திற்கு 10% வட்டி), ஒரு நிறுவனத்தில் 1.2 லட்சமும் (10 லட்சத்திற்கு 12% வட்டி) லாபமாகக் கிடைக்கும். ஒரு நிறுவனத்தில் 1லட்சம் நட்டம். மொத்தத்தில் 7.2 லட்சம் லாபம். அதாவது 7.2% வட்டி.










எண் முதலீடு வங்கி வட்டி விகிதம்வருமானம்
1. 50 லட்சம்SBI 8%4 லட்சம்
2. 30 லட்சம்கூட்டுறவு 10%3 லட்சம்
3. 10 லட்சம் கம்பெனி 112%1.2 லட்சம்
4. 10 லட்சம்கம்பெனி 213%கம்பெனி திவாலாகி 1 லட்சம் நட்டம்
மொத்தம் 1 கோடி7.2% 7.2 லட்சம்

இதே கம்பெனி திவால் ஆகாமல் ஒழுங்காக பணத்தைக் கொடுத்தால், 1 லட்சம் நட்டத்திற்கு பதில், 1.3 லட்சம் லாபம் கூடி இருக்கும். அதாவது 9.5 % வட்டி.

நிற்க. கோடி ரூபாய் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் இந்த பிளாக்கை படிக்க மாட்டார்கள் என நினக்கிறேன். ஆயிரம் ரூபாயும் ஐயாயிரம் ரூபாயும் வைத்து இருப்பவர்கள் என்ன செய்வது?

இப்படி பலர் இருப்பதால், இவர்கள் பணத்தை எல்லாம் சேர்த்து பல கோடிகள் ஆன பின்னர், அவற்றை வட்டிக்கு விடலாம். இதுதான் debt fund எனப்படும் “வைப்பு நிதி பரஸ்பர நிதி”.

இதற்கும் மார்க்கெட்டுக்கும் நேரடியாக சம்பந்தம் இல்லை. மார்கெட் விழுந்தாலும் மேலே பறந்தாலும் கவலை இல்லை. ஆனால், வங்கியில் வட்டி விகிதம் மாறினால், இவற்றின் மதிப்பு மாறும். ஏனென்றால் வங்கி வைப்பு நிதி (மற்றும் நிறுவன வைப்பு நிதி )தான் இதற்கு underlying asset (அடிப்படை சொத்து?)

வங்கியின் வட்டி விகிதம் திடீரென அதிகரித்தால் இதன் மதிப்பு கொஞ்ச காலம் சிறிதளவு குறையும். நான் தவறாக எழுதவில்லை. வட்டி விகிதம் அதிகரித்தால் இதன் மதிப்பு சிறிதளவு குறையும், அதிகரிக்காது. இதற்கு காரணம் என்ன?

நீங்கள் 100 ரூபாயை வங்கியில் ஒரு வருட வைப்பு நிதியாக ஜனவரி 1ல் (2008இல்) போட்டால், உங்களிடம் ஒரு பத்திரத்தில் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் தருவதாக எழுதிக் கொடுப்பார்கள். அதே நாள் இன்னொருவர் சென்று 100 ரூபாய் போட்டாலும் அவருக்கும் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் கொடுப்பதாக எழுதித் தருவார்கள். அதாவது 10 சதவிகித வட்டி.

மறுநாள் திடீரென்று வட்டி 5 சதவிகிதம் என்று குறைவதாக கற்பனை செய்யவும். (நடைமுறையில் ஒரேடியாக குறையாது. கணக்கு சுலபமாக இருக்க இப்படி கற்பனை செய்வோம்). அப்போது உங்கள் கையில் இருக்கும் பத்திரத்தின் மதிப்பு என்ன தெரியுமா?

5% வட்டியில் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் வேண்டும் என்றால், நீங்கள் 104.75 ரூபாய் போட வேண்டும். அப்போதுதான் 5% வட்டியில் 110 ரூபாயாக ஒரு வருடத்தில் மாறும். 100 ரூபாய் போட்டால் அது 105 ரூபாயாக மாறும். அதனால், வட்டி விகிதம் குறைந்ததால், உங்கள் பத்திரத்தின் மதிப்பு ஏறக்குறைய 4.75 % கூடிவிட்டது.

இதே வட்டி குறையாமல் கூடி இருந்தால்? 10% பதில் 20% என மாறிவிட்டால், உங்கள் மையில் இருக்கும் பத்திரத்தின் மதிப்பு 91.67 ரூபாய்தான்? ஏனென்றால் 91.67 ரூபாய் போட்டால், ஒரு வருடத்தில், 20% வட்டியில் அது 110 ரூபாய் ஆகிவிடும்.

இப்போது,
  1. உங்கள் முதல் முற்றிலும் முழுகவில்லை என்பதை கவனிக்கவும். 100 ரூபாய் என்பது கொஞ்சம் மதிப்பு குறையலாம் அல்லது கூடலாம். ஆனால் திவால் ஆகாது.


  2. வட்டி விகிதம் இப்படி எல்லாம் எகிறவோ இறங்கவோ செய்யாது. கால் விகிதம் மாறவே மாதக்கணக்காக ஆகலாம். அதனால் உங்கள் இழப்பு அல்லது லாபம் அவ்வளவாக மாறாது. நான்
    சும்மா கணக்கு சுலபமாக இருக்க இப்படி பெரிய மாற்றங்களைக் கற்பனை செய்து கொள்ள சொன்னேன்.


  3. இந்த பரஸ்பர நிதிகளை திவாலாகும் கம்பெனிகளில் வட்டிக்கு விட மாட்டார்கள். அதனால் முதலுக்கு மோசம் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.



சரி, இவ்வளவு சித்திரவதை ஏன்? பேசாமல் வங்கியில் வைப்பு நிதி வைத்து விட்டு போகவேண்டியதுதானே?

அதுதான் பெரும்பாலானவர்களுக்கு சரி. சில சமயங்களில் சிலருக்கு இதில் நன்மை உண்டு.

1. உங்கள் வைப்பு நிதி வட்டிக்கு வரி பிடிப்பார்கள். இந்த பரஸ்பர நிதியில், நீங்கள் இவற்றை விற்கும் போது மட்டுமே வரி கட்ட வேண்டும். அதுவும் நீங்கள் கட்ட வேண்டும். அவர்கள் பிடிக்க மாட்டார்கள்.

அதனால், 3 வருடம் விற்காமல் இருந்தால், அதுவரை வரி கட்ட வேண்டியதில்லை. வருடா வருடம் அவர்கள் பணம் பிடிப்பதும், நாம் மேலே கட்டுவது அல்லது திரும்பக் கேட்பது என்ற தொல்லை இல்லை.

2. ஒரு வருடத்திற்குள் விற்றால் முழு வரி கட்ட வேண்டும். ஒரு வருடம் கழித்து விற்றால், வரி குறைவு. இதற்கு முன் 10% என இருந்தது, இப்போது ப.சிதம்பரம் 15% என மாற்றி இருக்கிறார் என கேள்வி. (இதை சரி பார்க்க வேண்டும். சுட்டிக் காட்டிய மங்களூர் சிவாவிற்கு நன்றி).

3. ஒவ்வொரு வருடமும் வைப்பு நிதியை renew செய்ய வேண்டும். இதில் அந்தக் கவலை கிடையாது.

4. வைப்பு நிதியை ஒரு வருடத்திற்கு என நினைத்து போடுகிறீர்கள். ஏதோ அவசரத்திற்கு அதை 3 மாதங்களில் எடுத்தால், குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும். பரஸ்பர நிதியில் அப்படி இல்லை. தினமும் சிலர் பணம் போடுவார்கள், சிலர் பணம் எடுப்பார்கள். அதனால் ஒவ்வொரு நாளும் சில வைப்பு நிதிக் கணக்கு துவங்கப்படும், சில வைப்பு நிதிகள் (mature ஆனவை) முடிக்கப்படும். முடிக்கப்பட்ட நிதியில் இருந்து பணத்தை எடுத்து உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். எல்லோருக்கும் ஓரளவு நல்ல வட்டி வரும்.

ஆனால், பெரும்பாலான மக்களுக்கு இதனால் பெரிய லாபம் இல்லை என்பதால், நான் இதை வலியுறுத்தவில்லை.
பின் குறிப்பு
இதிலேயே short-term, long-term , very short term (liquid) என்றெல்லாம் பிரிவுகள் உண்டு. இவை இன்னும் நுணுக்கமான வித்தியாசங்கள் கொண்டவை. கடைசியில் வருவாயை பார்த்தால் பெரிய வித்தியாசம் இருக்காது. பல கோடி ரூபாயை fixed deposit இல் போட விரும்புவர்கள்தான் அந்த நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தேவையில்லை.

Tuesday, March 25, 2008

பரஸ்பர நிதி - கேள்வி பதில் 2 (Mutual Funds. Q&A part 2)

4. பங்கு வாங்கினால் சில சமயம் டிவிடென்ட் தருகிறார்கள். பரஸ்பர நிதியிலும் சில சமயம் டிவிடெண்ட் தருகிறார்கள். இரண்டுமே நமக்கு வருவாய்தானே?

5. பரஸ்பர நிதியில் growth மற்றும் dividend என்று இரண்டு வித choice இருக்கின்றன. எந்த சமயத்தில் எது வாங்க வேண்டும்?


இரண்டுக்கும் சேர்த்து சற்று விரிவான பதில்.

பங்கு வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட் தருவதற்கும், பரஸ்பர நிதியில் டிவிடெண்ட தருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இதற்கு முன்பே, பங்கு வாங்குவது தேவையற்றது, நல்லதல்ல என்ற எனது கருத்தை, காரணங்களுடன் கூறி இருக்கிறேன். எப்படியோ, உங்களிடம் Infosys போன்ற நிறுவனங்களின் பங்கு (share or equity) இருந்தால், சில சமயங்களில் அந்த நிறுவனம் டிவிடெண்ட் என்று கொஞ்சம் பணத்தை அனுப்பும். அது லாபத்தில் கொஞ்சம் பகுதியை உங்களுடன் பகிர்வது போல. இதனால் பங்கின் விலை ஏறவோ இறங்கவோ செய்யாது.

ஆனால், பரஸ்பர நிதியில் டிவிடெண்ட் என்பது, உங்கள் பணத்தையே உங்களுக்கு திருப்பித் தருவதாகும். உதாரணமாக, நீங்கள் பரஸ்பர நிதிக்கு பதில் தங்கத்தில் முதலீடு செய்வதாக கற்பனை செய்து கொள்ளவும். பத்து வருடங்களுக்கு முன் 1998ல் 10,000 ரூபாய்க்கு தங்கம் வாங்கி இருக்கிறீர்கள். இப்போது அந்த தங்கத்தின் மதிப்பு 20,000 ரூபாய். இதில் 5000 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை விற்றுவிட்டால், உங்களிடம் கையில் 5000 ரூபாய் பணமாகவும் (cash) மீதி 15000 ரூபாய் தங்கமாகவும் இருக்கும்.

அதைப்போலவே, பரஸ்பர நிதியில் உங்கள் முதலீடு 10000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர்கள் உங்களுக்கு 2000 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்தால், உங்கள் பரஸ்பர நிதியின் மதிப்பு 8000 ரூபாயாகக் குறைந்துவிடும். இப்பொழுது 8000 ரூபாய்க்கு பரஸ்பர நிதியும், 2000 ரூபாய் பணமாகவும் (cash) இருக்கும்.

பலரும் இதை உடனடியாக உணர்வது இல்லை. டிவிடெண்ட் கொடுத்த பின், பரஸ்பர நிதியின் மதிப்பு குறையும். உதாரணமாக, NAV (net asset value) என்பது டிவிடெண்டுக்கு முன் 15 ரூபாய் என்று இருந்தால், 2 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்த பிறகு 13 ரூபாய் ஆகிவிடும். உங்களிடம் இருக்கும் யூனிட்டின் எண்ணிக்கை மாறாது. நீங்கள் அதை மட்டும் பார்த்தால், ”டிவிடெண்ட் வந்து விட்டது, அதே அளவு யூனிட்டும் இருக்கு” என்று மகிழ்வார்கள்.

உங்கள் பணத்தில் ஒரு பகுதியை, உங்களுக்கு திருப்பி கொடுப்பதில் என்ன பயன்? வேண்டும் என்றால் நீங்களே உங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை விற்று காசாக்கலாமே? எதற்கு இந்த டிவிடெண்ட்?

இது சரியான கேள்வி. பெரும்பாலானவர்களுக்கு, பெரும்பாலான் சமயங்களில் இந்த டிவிடெண்டால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான், நீங்கள் வாங்கும் பரஸ்பர நிதி growth option எனப்படும் டிவிடெண்ட் இல்லாத முறையிலேயே வாங்கவேண்டும்.

எந்த சமயத்தில் யாருக்கு இந்த பரஸ்பர நிதி டிவிடெண்டினால் பயன்?
பங்கின் மூலம் வந்தாலும், பரஸ்பர நிதிமூலம் வந்தாலும் உங்களுக்கு வரும் டிவிடெண்ட் சட்டப்படி வரிவிலக்கு பெற்றது.

நீங்கள் பரஸ்பர நிதியை வாங்கி ஒரு வருடத்திற்குள் விற்றால், அதில் வரும் லாபத்திற்கு 10 % வரி கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் விற்றால், முழு வரி விலக்கு. ஆனால், நீங்கள் நிதி வாங்கி 6 மாதத்தில் டிவிடென்ட் வந்தால் அதற்கு வரி விலக்கு. இந்த நிலையில் டிவிடெண்ட் option எடுத்து இருப்பவர் வரி கட்ட மாட்டார். அதே சமயம், 6 மாதத்தில் பரஸ்பர நிதியை விற்பவர் வரி கட்ட வேண்டும்.

பலரும் வரி கட்டாததால், நடைமுறையில் இந்த வித்தியாசம் கூட இருப்பதில்லை.

எனது கருத்துப்படி பரஸ்பர நிதியை மூன்று வருடங்களுக்கு மேல் வைத்திருக்கும் எண்ணம் இருந்தால், முழு வரிவிலக்கை எப்படியும் அனுபவிப்பீர்கள். அதனால் டிவிடெண்டால் பயனில்லை.

இன்னமும் சில நுணுக்கமான subtle விவரங்கள் உண்டு. ஆனால் அவை அவ்வளவு முக்கியம் இல்லை. கடைசியில் உங்கள் வருவாயை அவை அதிகம் பாதிக்காது. அதனால் அவற்றை சொல்லி உங்களை குழப்பாமல் விட்டு விடுகிறேன் :-)

Monday, March 24, 2008

எந்தப் பரஸ்பர நிதிகளை வாங்கலாம்?

பரஸ்பர நிதிகளை வாங்குவதற்கு முன், நமது தேவைகளையும், மாத வருமானத்தைப் பற்றியும் சிந்தித்து பின்னர் ‘ஒவ்வொரு மாதமும் என்னால் சுமார் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். அதை நான் அடுத்த 3 வருடங்களுக்கு, அல்லது 5 வருடங்களுக்கு தொடமாட்டேன்” என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட பணத்தை மட்டும் பரஸ்பர நிதியில் போடலாம்.

“நடு நடுவில் நான் வாங்கிய பரஸ்பர நிதியின் மதிப்பு கூடவோ குறையவோ செய்யலாம். பயந்து அல்லது அவசரப் பட்டு விற்று விடக் கூடாது” என்ற சுயக் கட்டுப்பாட்டையும் வலியுறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல வழி என்ன என்றால், முதலீடு செய்த பின்னர் சில வருடங்களுக்கு அதன் மதிப்பைப் பற்றியே பார்க்கக்கூடாது. தினமும் பார்த்துக் கொண்டு இருந்தால், கை அரிக்கும்.

இத்தனைக்கும் தயாராக இருந்தால்...................

1. SBI Magnum Contra-Growth
2. Kothak 30-Growth
3. DSP- TIGER-Regular-Growth
4. Kothak Opportunities-Growth
5. Franklin India Prima Plus-Growth
6. Franklin India Index BSE Sensex - Growth
7. HDFC Top 200 -Growth
8. HDFC Growth - Growth
9. HDFC Equity - Growth

இவை எல்லாவற்றையும் வாங்க வேண்டாம். ஒன்று அல்லது இரண்டு வாங்கினால் போதும். மீண்டும் மீண்டும் (மாதாமாதம் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை) வாங்கும் பொழுது, முன்பு வாங்கிய நிதியிலேயே வாங்க வேண்டும்.

இந்த லிஸ்ட் எப்படி வந்தது? www.valueresearchonline.com என்ற வலைப்பதிவில், இந்திய பரஸ்பர நிதிகள் பற்றி நல்ல புள்ளி விவரங்கள் இருக்கின்றன. அதிலிருந்து ‘பரவலான பங்குகளை வாங்கும் பரஸ்பர நிதி' (Diversified Equity Mutual Funds) என்ற வகை பரஸ்பர நிதிகளை பார்க்கலாம். அவற்றில், பெரிய நிறுவனங்களில் (Large Cap) முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளை இங்கு கொடுத்து இருக்கிறேன். இவைதான் பெரும்பாலான மக்களுக்கு உகந்த பரஸ்பர நிதிகள்.

சில நல்ல நிதிகள் விட்டுப் போய் இருக்கலாம். அது வேண்டுமென்று இல்லை. ஆனால் மேலே இருக்கும் லிஸ்டில் இருப்பவைகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு நிதிகளில் பணம் போட்டால் போதும். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் போடுவதில் புண்ணியம் இல்லை. உங்களுக்கு எல்லாக் கணக்கையும் கூட்டிக் கழித்து தலைவலிதான் மிஞ்சும். மாதம் 20,000 வரை பணம் போடும் அளவு வசதி இருந்தால் 3 நிதிகளில் போடலாம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மாதம் 10,000 போடுவதே சிரமம். (இந்தப் பணத்தை 3 வருடங்களுக்கு தொடக்கூடாது என்பதை மறுபடி நினைவு படுத்திக் கொள்ளவும்.) அதற்கு ஒன்று அல்லது இரண்டு நிதிகள் தான் சரி.

எந்த நிறுவனம் நல்ல நிறுவனம்?

ஏறக்குறைய எல்லா நிறுவனஙகளுமே நல்ல நிறுவனங்கள்தான். ஏதாவது முன்பின் தெரியாத கம்பெனி புதிதாக வந்தால்தான் நாம் யோசிக்க வேண்டும். SBI, Franklin Templeton, Fidelity, Reliance, HDFC, HSBC, ICICI ஆகிய எல்லாமே நம்பிக்கையானவைதான்.

ஆனால் ஒவ்வொன்றிலும் நல்ல நிதிகளும் இருக்கின்றன. ‘லாயக்கில்லாத' நிதிகளும் இருக்கின்றன. நாம்தான் பார்த்து வாங்க வேண்டும். அதனால்தான், இதற்கு முன் பாகத்தில் ஒரு லிஸ்ட் கொடுத்து இருக்கிறேன்.

டிஸ்கி. எனக்கு நீங்கள் இந்த பரஸ்பர நிதிகளை வாங்குவதாலோ (அல்லது எதை வாங்கினாலும்), ஒரு பைசா வராது. எனவே, ‘இவனும் சுய நலத்தோடு எழுதுகிறானோ' என்ற கவலை வேண்டாம். நான் தனிவாழ்க்கையில் பெரும்பாலும் சுய நலத்தோடு நடந்து கொண்டாலும், பதிவுகளில் எழுதும்பொழுது அதை முன்னிறுத்தி எழுதவில்லை.

Sunday, March 23, 2008

பரஸ்பர நிதி - கேள்வி பதில் 1 (Mutual Funds. Q&A part 1)

1. ”எனக்கு தெரிந்து பலர் பங்கு சந்தையில் பணம் பார்த்திருக்கிறார்களே, நானே போன வருடம் பத்தாயிரத்தை பதினைந்தாக மாற்றினேனே, நீ ஏன் நேரடியாக பங்கு (stock)அல்லது துறைசார் பரஸ்பர நிதி வாங்க வேண்டாம் என்கிறாய்?”

பதில்: சில சமயங்களில் நீங்கள் நல்ல லாபம் கண்டிருக்கலாம். ஆனால் பல வருடங்களுக்கு அது தொடர வாய்ப்பு மிகக் குறைவு. நீங்கள் உங்கள் லாபத்தை, பங்கு-பரஸ்பர நிதியின் லாபத்துடன் பல ஆண்டுகள் compare செய்து பார்த்தால், நம்மில் ஏறக்குறைய அனைவருக்குமே லாபம் குறைவாகத்தான் வரும். ஒருவருக்கு ஓரிரு வருடங்களில் வந்த லாபத்தை வைத்து முடிவெடுக்கக் கூடாது.

நீங்கள் ஒரு ‘கிக்'கிற்காக கொஞ்சம் பணத்தை எடுத்து பங்கில் (Stock) இல் போடுங்கள், தவறில்லை. அதை முதலீடு என்று நினைக்க வேண்டாம். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பலரும், Los Vegas என்ற கேளிக்கை நகருக்கு சென்று கொஞ்சம் பணத்தை செலவிடுவார்கள். அதில் சூதாட்டம் (gambling machine) உண்டு. அதில் பணம் போட்டால் சில சமயம் கொஞ்சம் (அல்லது நிறைய்) பணம் கிடைக்கும். பெரும்பாலும் இழப்புதான் இருக்கும். பலரும் வருடத்தில் ஒரு நாள் இங்கு வந்து சுற்றிப்பார்த்து ரிலாக்ஸ் செய்து, சூதாட்டத்தில் விளையாடி,பல மணி நேரங்களில் 200 டாலர் அல்லது 500 டாலர் இழந்து அல்லது அதிசயமாக 200 டாலர் சம்பாதித்து வருவார்கள்.

இதைக் குறை சொல்லவில்லை. ஆனால் அது சம்பாதிக்கும் வழி என்று நினைத்தால்தான் பிரச்சனை. நீங்கள், ‘போனால் போகட்டும்' என்று ஒரு தொகையை எடுத்து, பங்கு வாங்கலாம். அது மேலே போனால் ஜாலி, கீழே போனால் பரவாயில்லை. உங்களுக்கு தேவை, அதை தினமும் பார்த்து 'கிக்' ஏற்படுவது. இந்த நோக்கில் பங்கு வாங்குவதோ அல்லது துறைசார் பரஸ்பர நிதி வாங்குவதோ தவறில்லை.

அதே சமயம் சூதாட்டத்தில் அளவுக்கு மீறி பணம் கட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதைப்போலவே பங்கிலோ அல்லது துறைசார் பரஸ்பர நிதியிலோ ஆர்வக்கோளாறில் அதிகம் பணம் போடக்கூடாது.

இந்த வம்பே வேண்டாம் என்றால் லாஸ் வேகாஸ் பக்கமே போகக்கூடாது. அதாவது பங்கு அல்லது துறை சார் பரஸ்பர நிதி வாங்கவே கூடாது.

2. இதில் ஏன் ULIP, NFO பற்றி எழுதவில்லை?
ULIP என்பது நமது காப்பு நிதியில் (insurance) ஒரு பகுதியில் பரஸ்பர நிதி வாங்குவது. உங்களுக்கு தேவை காப்பு நிதி என்றால் அதைத் தனியாக வாங்குங்கள். பரஸ்பர நிதி என்றால் அதைத் தனியாக வாங்குங்கள். நீங்கள் தனியாக வாங்கினால், உங்களுக்கு தேவையான பரஸ்பர நிதியை வாங்கலாம். ULIP வாங்கினால், அவர்கள் இஷ்டத்திற்கு வாங்குவார்கள். அவர்கள் இஷ்டத்திற்கு மாற்றுவர்கள். அதில் இருக்கும் கமிஷனின் அளவு அதிகம்.

இது தவிர இந்த ULIP மாதிரி திட்டங்களில், “அடுத்த 20 வருடங்களுக்கு நான் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் ரூபாய் கட்டுவேன்” என்பது போல கையொப்பம் இடவேண்டி இருக்கும். உங்கள் வேலை மாறலாம், திடீர் என்று செலவு வரலாம். அப்போது கூட இந்த 20 ஆயிரத்தை கட்ட வேண்டும். இல்லாவிட்டால் நிறைய இழப்பு.

ஆனால், நீங்களாக பரஸ்பர நிதி வாங்கினால், உங்களிடம் காசு இருந்தால் வாங்குவீர்கள். திடீரென்று தவிர்க்க இயலாத செலவு வந்தால் அந்த வருடம் பரஸ்பர நிதி வாங்க மாட்டீர்கள். இதனால் இழப்பு இல்லை. தேவையில்லாமல் அதிககாலத்திற்கு நாம் பணம் கட்டும் உடன்படிக்கையில் கையொப்பம் இடக்கூடாது.

NFO என்பது, புதிய பரஸ்பர நிதி. அதற்கும் பழைய பரஸ்பர நிதிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பழைய பரஸ்பர நிதியில் அது எப்படி returns தரும் என்பதை நாம் அறியலாம். புதிய நிதியில் அது கூடக் கிடையாது.

NFO 10 ரூபாய் என்றால் அது cheap என்று தவறான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. இது உண்மை அல்ல. நீங்கள் 10 ரூபாய்க்கு வாங்கும் பங்கு ஒரு வருடம் கழித்து 15 ரூபாய் என்று மாறுவதாக வைத்துக் கொள்வோம். அதே போன்ற பழைய பரஸ்பர நிதி, முதலில் 120 ரூபாய் என்று இருந்தால், அது ஒரு வருடத்தில் 180 ரூபாய் ஆகி இருக்கும். எனவே, வருமானம் இரண்டிலும் 50%. பரஸ்பர நிதியில் அதன் தற்போதைய மதிப்பை வைத்து எடைபோடக் கூடாது. அது பங்கு போன்றது அல்ல.

3. பரஸ்பர நிதியில் 10 ரூபாய்க்கு வரும் புது நிதி (New Fund Offer அல்லது NFO) குறைந்ததுதானே? அதைவிட்டு ஏன் அதிக விலை இருக்கும் பழைய நிதிதான் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய்?

பரஸ்பர நிதியின் விலை என்பது நாம் வாங்கும் பொருளின் விலை போல இல்லை. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். இங்கு பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளை குறிப்பாக பார்ப்போம். ஒரு பரஸ்பர நிதி எந்த பங்குகளில் முதலீடு செய்கிறது என்பதைப் பொறுத்துதான் அது வளர்வதும், தேய்வதும் இருக்கும்.

நாம் சாதாரணமாக தங்கம் வாங்கினால் அதை அரை பவுன், ஒரு பவுன் என்று எடையில் வாங்கலாம். ஒரு பவுன் என்பது 8 கிராம். வெள்ளி என்பதை கட்டியாக வாங்கினால் 100 கிராம் என்று வாங்கலாம் என்று நினைக்கிறேன். தங்கத்தின் தற்போதைய விலை ஒரு கிராம் சுமார் 1000 ரூபாய். வெள்ளியின் தற்போதைய விலை ஒரு கிலோ சுமார் 30,000 ரூபாய்.
தங்கத்தின் விலை பத்து வருடங்களுக்கு முன் 1998இல் சுமார் கிராம் ஒன்றுக்கு 500 ரூபாய் என்றும் வெள்ளி விலை கிலோவிற்கு 10,000 ரூபாய் என்றும் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளவும். தாமிரத்தின் விலை 1998ல் கிலோ 100 ரூபாய் என்றும் 2008இல் விலை குறைந்து கிலோ 50 ரூபாய்க்கு விற்கிறது என்றும் கற்பனை செய்து கொள்ளவும். (கணக்கு சுலபமாக இருக்க விலையை கொஞ்சம் கூட்டி குறைத்து கொள்கிறேன். எங்கே தங்கம் கிராமுக்கு 1000 ரூபாயில் கிடைக்கிறது என்று கேட்க வேண்டாம்! தாமிரமோ அல்லது வேறு உலோகமோ விலை குறையவில்லை)


விலை 1998 2008
தங்கம் கிராம் ஒன்றிற்கு 500 1000
வெள்ளி கிலோவிற்கு 10000 30000
தாமிரம் கிலோவிற்கு 100 50 (விலை குறைந்து இருக்கிறது)


நீங்கள் கடையில் சென்று தங்கக் காசு வாங்க வேண்டும் என்றால் அதை அரை பவுன் அல்லது ஒரு பவுனாகத்தான் வாங்க முடியும் . இப்போது அரை பவுன் தங்கக் காசு வேண்டும் என்றால் 4 கிராம் = 4 * 1200 = 4800 ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, ஆயிரம் ரூபாய்க்கு தங்கக் காசை வெட்டிக் கொடு என்று கேட்டால், கொடுக்க மாட்டார்கள்.

ஆனால் நகைகள் ஒரு பவுன், அல்லது அரை பவுன் என்று இல்லாமல் வேறு அளவிலும் கிடைக்கும். (அதில் சேதாரம், செய்கூலி, கல் விலை என்று தீட்டி விடுவார்கள். ஆனால் இப்போதைய உதாரணத்தில் அவை எல்லாம் இல்லை என்று கற்பனை செய்து கொள்ளவும்).

நீங்கள் 1998இல் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நகை (தோடு) வாங்கி இருந்தால், அதில் 2 கிராம் தங்கம் இருக்கும். அதன் மதிப்பு இப்போது 2 * 1000 = 2000 ரூபாய்.
இப்போது கடைக்கு போனாலும் ஆயிரம் ரூபாய்க்கு தோடு கிடைக்கும். ஆனால், அதன் எடை 1 கிராம் தான் இருக்கும்.

தங்கம் விலை அடுத்த ஆண்டில் ஏறலாம் அல்லது இறங்கலாம். 10% ஏறும் என்று நாம் எதிர்பார்ப்போம். அப்போது பழைய தோடின் மதிப்பு 2200 ரூபாய் ஆகும். புதிய தோடின் மதிப்பு 1100 ரூபாய் ஆகும்.

பழைய தோடு நல்ல முதலீடா, புதிய தோடு நல்ல முதலீடா என்று கேட்டால் இரண்டும் சரி சமம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கும். இப்போதைய தோடு மலிவாகக் கிடைப்பதாகச் சொல்லலாமா? கூடாது. இதன் எடையும் குறைவு, அதனால் விலை குறைவும். புதிய தோடின் விலை 10% ஏறினால், பழைய தோடின் விலையும் 10% ஏறும். இவை இரண்டுமே தங்கத்தின் விலையைப் பொறுத்தது. இதை ஆங்கிலத்தில் underlying asset என்று சொல்வார்கள். தங்கத்தின் விலை இறங்கினால், இரண்டு தோடுகளின் மதிப்பும் இறங்கும்.

இதே 1998இல் 10 கிலோ தாமிரம் வாங்க 10 * 100 = 1000 ரூபாய் தேவை. அப்படி வாங்கி இருந்தால் அதன் மதிப்பு இப்பொழுது 500 ரூபாய் ஆகும். நீங்கள் இப்போது தாமிரக் கம்பி ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் 20 கிலோ கிடைக்கும். பழைய தாமிரக் கம்பி 500 ரூபாய் என்றால் அது மலிவு இல்லை. புதிய தாமிரக் கம்பி 1000 ரூபாய் என்றால் அது அதிக விலை இல்லை. இரண்டுக்கும் அடிப்படை பொருள் தாமிரமே.

இன்னும் சொல்லப்போனால், பழைய தாமிரம் விலை குறைவதால் அதை மலிவு என நினைத்து நாம் வாங்க மாட்டோம். மேலும் விலை குறையுமோ என பயந்து இனிமேல் தாமிரத்தில் முதலீடு செய்யக் கூடாது என்றுதான் நினைப்போம்.

பரஸ்பர நிதி என்பது நகை வாங்குவது போன்றது. தங்கக் காசு போல அரை பவுன் அல்லது ஒருபவுன் என்று வாங்கப் படுவதில்லை. ஆயிரம் ரூபாய்க்கு தோடு, 5000 ரூபாய்க்கு வளையல் என்று வாங்குவது போன்றது.

நீங்கள் 1998இல் உங்கள் காசை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இப்போது இரண்டு மடங்காக இருக்கும். வெள்ளியில் முதலீடு செய்திருந்தால் மூன்று மடங்காகி இருக்கும். தாமிரத்தில் செய்திருந்தால் பாதி இழப்பு இருக்கும்.

இந்த விவரங்களை வைத்து இப்போது நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் எதில் செய்வீர்கள்? வெள்ளியில் செய்ய நினைப்போம். எல்லா பரஸ்பர நிதியிலும், “Past performance is not an indicator of future performance" “முன்பு விலை கூடியதால் இப்போதும் கூடும் என்று சொல்ல முடியாது” என்று எழுதி இருப்பார்கள். அது உண்மையே. ஆனால், முன்பே இழப்பான முதலீட்டில் நாம் மேலும் முதலீடு செய்ய மாட்டோம்.

இப்போது உங்களிடம் ஒருவர் வந்து ‘1000 ரூபாய் கொடுங்கள், நான் வேறு உலோகத்தில் உங்களுக்கு முதலீடு செய்கிறேன்” என்று சொன்னால் கொடுக்க மாட்டீர்கள். உங்களுக்கு தெரிந்து தங்கமும் வெள்ளியும் லாபத்திலும், தாமிரம் நட்டத்திலும் இயங்குகின்றன. இதை விட்டு, முன்பின் விலை விவரம் தெரியாத வேறு உலோகத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்.

அவர் ”புதிய உலோகம் ஒவ்வொரு கிலோவும் 200 ரூபாய்தான், உங்களுக்கு 5 கிலோ வாங்கித் தருகிறேன் ” என்று சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அதை மலிவு என்று நினைப்போமா? புதிய உலோகம் என்ன என்று தெரியாமல் முடிவுக்கு வர முடியாது. கூடாது. புதிய உலோகம் அலுமினியமாக இருக்கலாம். அது விலை கூடுமா குறையுமா என்று நமக்கு தெரியாது. அதற்கு பதில் தங்கத்திலோ வெள்ளியிலோ முதலீடு செய்யலாமே? “தங்கம் கிராம் 1000 ரூபாய், புதிய் உலோகம் தான் மலிவு” என்று யாரும் நினைப்பதில்லை.

அதைப்போலவே, பரஸ்பர நிதியின் (தோடின், அல்லது கம்பியின்) மதிப்பு, அதில் இருக்கும் அடிப்படை பங்குகளை (தங்கமா அல்லது தாமிரமா என்பதைப்) பொறுத்தது. பழைய பரஸ்பர நிதிகள் பற்றி நமக்கு தெரியும். இப்பொழுதும் தங்கம் விலை ஏறுமா அல்லது இறங்குமா என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால்,தங்கத்தையும் வெள்ளியையும் தாமிரத்தையும் ஒப்பிட்டு, தங்கத்திலோ வெள்ளியிலோ முதலீடு செய்வோம்.

ஒரு சிலர், தாமிரம் ஏற்கனவே மிகவும் இறங்கி விட்டது, இனி கீழே போகாது, மேலேதான் போகும் என்று முடிவு செய்து முதலீடு செய்யலாம். அதில் கூட ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால், தெரியாத “புதிய உலோகத்தில்” முதலீடு செய்வது சூதாட்டம்தான். புதிய பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது, ‘புதிய உலோகம் கிலோ 200 ரூபாய்தானாம், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு கிராம் தங்கம் வாங்குவதை விட 5 கிலோ புதிய உலோகம் வாங்கலாம்” என்று சொல்வதைப் போல. (இதே வார்த்தைகளை “ஆயிரம் ரூபாய் கொடுத்தால், NFOஇல் 100 யூனிட் கிடைக்கும், பழைய பரஸ்பர நிதியில் 15 யூனிட்தான் கிடைக்கும். NFO தான் better” என்று, என் கூட வேலை செய்பவர் என்னிடம் வாதாடி இருக்கிறார்)

பிறகு எதற்கு இவ்வளவு NFO? மக்களே, புதிய பரஸ்பர நிதி விற்பதில் ஏஜண்டுகளுக்கு அதிக கமிஷன் உண்டு. அதில் initial expense என்று கூறி பணம் பறிக்க வழி உண்டு. பழைய பரஸ்பர நிதியை விற்பதில் கமிஷன் குறைவு. இப்போது SEBI, நீங்கள் நேரடியாக பரஸ்பர நிதியை வாங்கினால் கமிஷனே கூடாது என்று வேறு உத்தரவு போட்டு விட்டது. நீங்கள் புதிய பரஸ்பர நிதியை (NFO) வாங்க வேண்டும் என்று ஏஜண்டுகள் சொல்ல அவர்களின் சுய நலமும், உங்கள் நலம் பற்றிய அக்கறைஇன்மையுமே காரணம். அவர்கள் சுயனலமாக இருப்பது தவறில்லை. அதற்காக நம் நலனை தியாகம் செய்வதுதான் தவறு.

இத்தனை நாள் நமது அறியாமையைப் பயன்படுத்தி middleman எனப்படும் நடுத்தரகர்கள் சம்பாதித்தனர். இன்னமும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Friday, March 21, 2008

நிதி திட்டம் . சுருக்கம் (Financial Planning .Summary)

இதுவரை நாம் பார்த்த பதிவுகளின் சுருக்கம், கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.




















முதலீடு வகை பாதுகாப்பு (Safety) வருமானம் (Returns) எவ்வளவு விரைவில் பணம் எடுக்கலாம் (Ease of converting to cash)
குறைந்த பட்ச முதலீடு (ரூபாய்)
வங்கி சேமிப்பு முழு பாதுகாப்பு 3 % உடனடியாக
100 அல்லது 1,000 (வங்கியைப் பொறுத்தது)
வங்கி வைப்பு நிதி முழு பாதுகாப்பு8% (மாறலாம். ஆனால் இழப்பு இருக்காது) ஒரு நாளில்1,000 அல்லது 5,000 (வங்கியைப் பொறுத்தது)
தங்கம்/வெள்ளி கொஞ்சம் பாதுகாப்பு குறைவு 10 % (மாறலாம். கொஞ்சம் இழப்பு இருக்கலாம்) ஒரு சில நாட்கள்
1,000 (நகையாக வாங்கினால்). 5,000 (தங்கக் காசாக வாங்கினால்). 1,200 (பரஸ்பர நிதியாக வாங்கினால்)
வீடு , நிலம் பாதுகாப்பு குறைவு 15% (மாறலாம். ஓரளவு இழப்பு இருக்கலாம்) சில மாதங்கள் சில லட்சங்கள்
பங்கு சந்தை ; பங்கு (Share) பாதுகாப்பு மிகக் குறைவு. இதை வாங்கக் கூடாது என்பது என் கருத்து -90 லிருந்து + 200 % வரை (மாறலாம், முழு முதலுக்கே மோசம் வரலாம்)* ஒரு சில நாட்கள் **5,000 அல்லது 10,000(உங்கள் புரோக்கரைப் பொறுத்தது)
பங்கு சந்தை: பங்கு பரஸ்பர நிதி (Diversified Equity Fund) பாதுகாப்பு குறைவு 20% (மாறலாம். முதலில் 30% வரை இழக்க வாய்ப்பு உண்டு) ஒரு சில நாட்கள் **500 முதல் 5,000 வரை இருக்கலாம்
பங்கு சந்தை: வைப்பு நிதி-பரஸ்பர நிதி(Debt Fund) ஏறக்குறைய முழு பாதுகாப்பு 7லிருந்து 8% (மாறலாம். ஆனால் இழப்பு இருக்காது) 3 அல்லது 4 நாட்கள் 1,000 முதல் 5,000 வரை இருக்கலாம்
பங்கு சந்தை: நடுநிலை பரஸ்பர நிதி (Balanced Fund) நடுத்தர பாதுகாப்பு (பங்கு பரஸ்பர நிதிக்கும் வைப்பு நிதி-பரஸ்பர நிதிக்கும் இடையே) 15% (மாறலாம், கொஞ்சம் இழப்பு இருக்கலாம்) சில நாட்கள்** 1,000 முதல் 5,000 வரை இருக்கலாம்
பங்கு சந்தை: துறைசார் பரஸ்பர நிதி (Sector Fund) பாதுகாப்பு குறைவு. இதையும் நாம் வாங்கக் கூடாது எனக் கருதுகிறேன் -50 முதல் +100% வரை* சில நாட்கள்** 1,000 முதல் 5,000 வரை இருக்கலாம்


* இங்கு -90% முதல் 200% வரை என்று எளிமைப் படுத்தி சொல்லி இருக்கிறேன். இதன் பொருள் பல மடங்கு லாபமும் வரலாம், எல்லாமே இழக்கவும் நேரிடலாம் என்பதே. அடுத்து -50% முதல் 100% வரை என்று சொன்னால், சில மடங்கு லாபம் வரலாம், நிறைய இழக்கலாம் என்று பொருள்.

** சில நாட்கள் என்று சொன்னாலும், “தேவைப்பட்டால், விலை சாதகமாக இருந்தால் 3 அல்லது 4 நாட்களில் விற்று பணம் ஆக்கலாம். ஆனால், விலை சாதகமாக இல்லை என்றால் நாம் பல மாதங்கள் அல்லது வருடங்கள் விற்காமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்படலாம்” என்று பொருள்.

உங்களுக்கு தோன்றக் கூடிய சில கேள்விகள்:

1. ”எனக்கு தெரிந்து பலர் பங்கு சந்தையில் பணம் பார்த்திருக்கிறார்களே, நானே போன வருடம் பத்தாயிரத்தை பதினைந்தாக மாற்றினேனே, நீ ஏன் நேரடியாக பங்கு (stock)அல்லது துறைசார் பரஸ்பர நிதி வாங்க வேண்டாம் என்கிறாய்?”
2. இதில் ஏன் ULIP, NFO பற்றி எழுதவில்லை?
3. பரஸ்பர நிதியில் 10 ரூபாய்க்கு வரும் புது நிதி (New Fund Offer அல்லது NFO) குறைந்ததுதானே? அதைவிட்டு ஏன் அதிக விலை இருக்கும் பழைய நிதிதான் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய்?
4. பங்கு வாங்கினால் சில சமயம் டிவிடென்ட் தருகிறார்கள். பரஸ்பர நிதியிலும் சில சமயம் டிவிடெண்ட் தருகிறார்கள். இரண்டுமே நமக்கு வருவாய்தானே?
5. பரஸ்பர நிதியில் growth மற்றும் dividend என்று இரண்டு வித choice இருக்கின்றன. எந்த சமயத்தில் எது வாங்க வேண்டும்?
6. Reliance, SBI, DBS, Franklin Templeton, Birla Sun life என்று பல நிறுவனங்கள் பரஸ்பர நிதியை விற்கின்றன. எந்த நிறுவனத்தின் பரஸ்பர நிதிகள் நல்லவை?
7. ஒவ்வொரு நிறுவனத்திலும் 30 அல்லது 40 பரஸ்பர நிதிகள் இருக்கின்றன. எதை வாங்க வேண்டும்?

வேறு இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கலாம். தெரிந்தவரை பதில் எழுதுகிறேன். பதில்கள் அடுத்த பதிவில்.

நிதித் திட்டமிடுதல் -3. வருமானம் (Financial Planning, Returns)

நாம் ஒவ்வொரு வகை முதலீட்டிலும் வெவ்வேறு அளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
பணத்தை எவ்வளவு விரைவில் எடுக்கலாம் என்பதையும் பார்ப்போம். பணத்தை விரைவில் எடுக்க முடிந்தால், அது அவசரத்திற்கு உதவும்.

  1. வங்கி சேமிப்பு. இதில் தற்போது 3.5 சதவிகித்ம் கிடைக்கும். இது கொஞ்சம் கூடவோ குறையவோ செய்யலாம். ஆனால் இது நிச்சயமாக நமக்கு கிடைக்கும். அதாவது இன்று 100 ரூபாய் போட்டால், ஒரு வருடம் கழித்து 103.5 ரூபாய் கிடைக்கும். பணத்தை தேவைப்பட்ட பொழுது உடனே எடுத்து விடலாம்.

  2. வங்கி வைப்பு நிதி. இது தற்போது 8 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை கிடைக்கும். சில தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் நல்ல வட்டி கொடுக்கின்றன. ஆனால், பாதுகாப்பு கருதி அரசு உடைமையாக்கப் பட்ட அல்லது பெரிய தனியார் வங்கிகளில் பணம் போடுவது நல்லது. பணத்தை தேவைப்பட்ட உடனே (சில மணிகள்,அல்லது விடுமுறை நாளாக இருந்தால், அல்லது அதிகம் பணம்தேவை இருந்தால், ஓரிரு நாட்களில்) எடுத்து விடலாம். இந்த வட்டி சதவிகிதம் மாறும் வாய்ப்பு உள்ளது. இது 3 சதவிகிதமாக குறையலாம் அல்லது 14 சதவிகிதமாக மாறலாம்.


  3. பரஸ்பர நிதி. பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியில் நாம் 15 சத விகிதம் முதல் 30 சதவிகிதம் வரை எதிர்பார்க்கலாம். சமயத்தில் இது 30 சதவிகிதம் இழப்பாகவும் மாறலாம். ஆனால் லாபம் சம்பாதிக்க, நாம் பல வருடங்கள் காத்து இருக்க தயாராக இருக்க வேண்டும். நமக்கு உடனடியாக அல்லது ஒரு வருடத்தில் தேவைப்படும் பணத்தை இந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்யக் கூடாது. குறைந்த பட்சம் 3 வருடங்கள் தேவை இல்லை என்ற பணத்தை இதில் முதலீடு செய்யலாம். அப்போதுதான் லாபம் வரும் என்று (ஏறக்குறைய) உறுதியாக சொல்ல முடியும். அதற்கு குறைவான கால கட்டத்தில் லாபமும் இருக்கலாம், நட்டமும் இருக்கலாம். இதை விற்று பணமாக்க 3 அல்லது 4 நாட்கள் ஆகலாம் ஆனால் என்ன பிரச்சனை என்றால்:
    • இப்போது உங்களுக்கு பணம் தேவை என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வைப்பு நிதியில் பணம் போடாமல் எல்லாவற்றையும் பங்குகளில் போட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

    • இப்போது மார்க்கெட் சரிந்து இருப்பதால், உங்களுக்கு 10 சதவிகிதம் இழப்பாக இருக்கலாம். இன்னம் ஒரு மாதம் காத்திருந்தால் அது 20 சதவிகித லாபமாக மாறக்கூடும். ஆனால் உங்களுக்கு பணத் தேவையால் நீங்கள் இப்போதே விற்கும் நிலைமைக்கு தள்ளப் படுகிறீர்கள்.

    • அதனால் இது நினைத்தால் 3 அல்லது 4 நாட்களில் பணமாக்க முடியும் என்றாலும், இதன் மதிப்பு விரைவில் அதிகம் கூடும் என்ற நம்பிக்கையாலும், தற்போது நட்டம் என்பதாலும், நீங்கள் விற்க தயங்குவீர்கள். அல்லது விற்றாலும் எதிர்பார்த்த வருமானம் இல்லை

    • மார்க்கெட் உயர்ந்து இருந்தால் உடனே விற்க (தேவைப்பட்டால்) தயங்க மாட்டீர்கள். அதனால் நீங்கள் விற்பது மார்க்கெட்டை பொறுத்தும் இருக்கிறது. 'நினைத்த போது விற்கலாம்' என்றாலும் மார்க்கெட் கீழிருக்கும்பொழுது ‘விற்க வேண்டும் என்று நினைக்கவே' தயங்குவோம்.

    • வைப்பு நிதியில் அந்த பிரச்சனை இல்லை. ஒரு மாதம் கூட வைத்திருந்தால், கொஞ்சம்தான் லாபம்.


  4. தங்கம்/வெள்ளி. இதில் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வரை லாபம் இருக்கலாம். இதுவும் கொஞ்சம் ஏறி இறங்கும் தன்மை உடையது. அதனால் ஓரிரு வருடங்கள் வரை தேவை இல்லாத பணத்தைதான் இதில் போட வேண்டும். அதற்குள் தேவைப்பட்டால், fixed deposit எனப்படும் வைப்பு நிதியில் போட வேண்டும். இதை காசாக வைத்திருந்தால், விற்று பணமாக்க சில நாட்கள் தேவை. பரஸ்பர நிதியாக வைத்திருந்தால், 3 அல்லது 4 நாட்களில் பணம் கைக்கு வந்து விடும்.

  5. நிலம்/வீடு. நாம் குடியிருக்க சொந்த வீடு இருப்பது பலருக்கும் மனதிற்கு நிம்மதி அளிக்கும். அப்படிப் பட்டவர்கள் இதை வாங்கிவிட வேண்டும். அதற்கு மேல் வீடு அல்லது நிலத்தை முதலீடாக வாங்குபவர்கள், பல வருடங்கள் காத்திருந்தால் ஆண்டுக்கு 20 சதவிகிதம் வரை லாபம் வரும். நடுநடுவில் அதைவிட அதிகமாகவும் போகலாம். அல்லது, இழப்பாகவும் போகலாம். ஆனால் 10 வருடம் காத்திருக்க தயார் என்றால் இது நல்ல முதலீடு.இதை அவசரத்திற்கு விற்க நினைத்தால் ஓரிரு மாதங்களும், நல்ல விலைக்கு விற்க நினைத்தால் ஒரு வருடம் வரையும் தேவைப்படும்




(சில பதிவுகளுக்கு பிறகு: 20ஆயிரம் சம்பளம் வாங்கும் 30 வயது ஆன ஒருவர் எப்படி திட்டமிடவேண்டும், எப்படி செயல்படுத்த வேண்டும் என்று ஒரு உதாரணம் பார்ப்போம். அவருக்கு 60,65 வயது பெற்றோர் இருக்கிறார்கள். ஒரு(?) மனைவி, ஒரு குழந்தை. பிறகு, வேறு சில உதாரணங்களையும் பார்ப்போம்.)

அடுத்து இதுவரை பார்த்ததன் சுருக்கத்தையும், சில கேள்வி பதில்களையும் பார்க்கலாம்.

Thursday, March 20, 2008

நிதி திட்டமிடுதல். 2. பாதுகாப்பு (Financial Planning. Risks)

நாம் வருவாய் பற்றி திட்டமிடும்பொழுது சில விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எந்த வகை முதலீடுகளில் எந்த அளவு வருமானம் (returns) எதிர்பார்க்கலாம், எவ்வளவு பாதுகாப்பானது (risk vs safe), எவ்வளவு முதலீடு வேண்டும், எவ்வளவு விரைவில் பணம் எடுக்கலாம் என்பது பற்றி முதலில் பார்ப்போம்.

எவ்வளவு வருமானம் என்பது நீங்கள் நூறு ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் எவ்வளவு திரும்ப வரும் என்பதாகும். நூற்றி ஐந்து என்றால் 5 சதவிகித வருமானம். 90 ரூபாய் என்றால் 10 சதவிகித இழப்பு.

எவ்வளவு பாதுகாப்பு என்பது, நீங்கள் போட்ட பணம் திரும்ப வருமா, கொஞ்சம் குறைந்து வருமா (இழப்பு) என்பதைக் குறிக்கிறது.

எவ்வளவு விரைவில் என்று நான் இங்கு சொல்வது, உங்களுக்கு இன்று பணம் வேண்டும் என்று தோன்றினால் எவ்வளவு நாளில் உங்கள் முதலீட்டை பணமாக்கலாம் என்பது. உதாரணமாக, சேமிப்பு வங்கியில் இருந்து ATM மூலம் ஐந்து நிமிட நேரத்திற்குள் பணம் எடுக்கலாம். வைப்பு நிதியில் இருந்தால் ஒரு சில மணிகளுக்குள் எடுக்கலாம். உங்கள் முதலீடு தங்கம் என்றால் அதைப் பணமாக்க ஓரிரு நாட்கள் ஆகலாம். முதலீடு ஒரு வீடு என்றால் அதை உடனே பணமாக்க முடியாது. அதை விற்று பணமாக்க ஓரிரு மாதங்கள் ஆகலாம். இதைத்தான் நான் இந்த இடத்தில் “எவ்வளவு விரைவில்” என்று சொல்கிறேன்.

எவ்வளவு முதலீடு வேண்டும் என்பதற்கு உதாரணம்: சேமிப்பு வங்கி கணக்கு தொடங்க ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் போதும். வைப்பு நிதிக்கு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் வேண்டும் (என்று நினைக்கிறேன்). தங்கத்தில் முதலீடு செய்ய குறைந்த பட்சம் அரை பவுன் காசு வாங்க ரூபாய் ஐயாயிரம் தேவைப்படும். வீடு அல்லது நிலத்தில் முதலீடு செய்ய சில லட்சங்கள் தேவை. பங்கு சந்தையில் முதலீடு செய்ய குறைந்த பட்சம் ஐநூறு ரூபாய் தேவை.

விவரங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

பாதுகாப்பு:
  1. நாட்டு உடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் நாம் போடும் பணம் எல்லாம் பாதுகாப்பானது. அது சேமிப்பு (savings) கணக்கானாலும் சரி, வைப்பு நிதி (fixed deposit) ஆனாலும் சரி
    • இதில் சட்டப்படி, ஒரு லட்சம் வரைதான் பாதுகாப்பு. ஆனாலும், State Bank of India போன்ற வங்கிகள் மூழ்காமல் அரசியல் காரணங்களுக்காக பாதுகாக்கப்படும். இந்த வங்கி மூழ்கினால் நாட்டில் பல கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். அரசு ஆட்சியில் இருப்பவர்கள் இந்த ஜென்மத்திற்கு ஓட்டு வாங்க முடியாது. அந்த பயத்தில் எப்படியாவது இது திவாலாகாமல் காப்பார்கள்

  2. ICICI போன்ற பெரிய தனியார் வங்கிகளும் ஓரளவு நல்ல பாதுகாப்பு உடையவை. நீங்கள் சேமிப்பு மற்றும் வைப்பு நிதிகளை இவற்றில் போடலாம்

  3. கூட்டுறவு வங்கிகள் மற்று சிறிய தனியார் வங்கிகள் கொஞ்சம் பாதுகாப்பு குறைந்தவை. சமயத்தில் திவாலாகலாம். வேறு வழி இல்லை, உங்கள் ஊரில் இது ஒன்றுதான் உண்டு என்றால் இவற்றில் பணம் போடலாம். மற்றபடி பெரிய வங்கிகளை விட ஓரிரு சதவீதம் அதிகம் வட்டி தந்தால் பணம் போட வேண்டாம்

  4. தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள். இவற்றை (ஓரளவுக்கு மேல்) வீட்டில் வைத்திருந்தால் திருட்டினால் இழக்க வாய்ப்பு இருக்கிறது. இவற்றின் விலையும் ஏறி இறங்கும். அதனால் நாம் இன்று 1 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் அதை ஒரு வருடத்திற்கு பிறகு விற்றால் நிச்சயமாக ஒரு லட்சத்திற்கு மேல் விலை போகும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலும் விலை கூடித்தான் இருக்கும். அதனால் இதை 'கொஞ்சம் பாதுகாப்பு குறைந்த' (some risk) முதலீடு என்று சொல்லலாம் அதாவது முதலுக்கு மோசம் வர கொஞ்சம் வாய்ப்பு உண்டு.
    • தங்கத்தை பங்கு சந்தையில் ஒரு விதமான குறிப்பிட்ட பரஸ்பர நிதியில் வாங்கலாம். அதில் திருடு போக வாய்ப்பு இல்லை. மற்ற படி தங்கத்தின் விலை ஏறினால் இதுவும் அதே அளவு ஏறும். தங்கம் விலை இறங்கினால் இதுவும் அதே அளவு இறங்கும். வெள்ளிக்கு இது போன்ற ஏற்பாடு இன்னமும் இல்லை

  5. வீடு, நிலம். இவையும் தங்கம் வெள்ளி போன்றதே. பெரும்பாலும் விலை ஏறும். ஆனால் நடுநடுவே விலை இறங்கவும் வாய்ப்பு உண்டு. இது தங்கம் வெள்ளியை விட பாதுகாப்பு குறைந்தது.
    • இதற்கும் பங்கு சந்தையில் பரஸ்பர நிதி வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இப்பொழுது (2008 மார்ச்சில்) இல்லை

  6. பங்கு சந்தை. இவற்றில் நேரடியாக பங்கு எனப்படும் stock வாங்கலாம். இது மிகவும் பாதுகாப்பு அற்றது. நீங்கள் ஆயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கினால் அது ஒரு மாதத்தில் இரண்டாயிரமாகவும் ஆகலாம். ஆயிரமாகவே இருக்கவும் செய்யலாம். நூறு ரூபாயாகவும் மாறலாம். இதை நேரடியாக நாம் வாங்குவது தவறு (தேவையற்றது) என்பது என் கருத்து.

  7. பங்கு சந்தையில் பரஸ்பர நிதி என்பதை வாங்கலாம். இதை பலவகையாகப் பிரித்து, நம்மை குழப்பி, குழம்பிய குட்டையில் (மூளையில்?) மீன்பிடிக்கவே (பணம் எடுக்கவே)பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன. நாம் உண்மையில் பார்க்க வேண்டியது ஒரு சில வகைகளை மட்டுமே.
    • பங்கு (Share) களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி. இவற்றை `Equity funds' என்று சொல்வார்கள். இது நேரடியாக பங்கு வாங்குவதை விட பாதுகாப்பானது. ஆனால் தங்கம் வெள்ளி அல்லது வீடு வாங்குவதை விட பாதுகாப்பு குறைந்தது.

    • சில பரஸ்பர நிதிகள், வங்கிகளில் வைப்பு நிதியில் உங்கள் பணத்தை போடும். இவற்றை debt funds என்று சொல்வார்கள். இவை ஏறக்குறைய உங்கள் வங்கியில் வைப்பு நிதி போடுவதற்கு சமம். அதைவிட கொஞ்சம் குறைவாக வருமானம் வரும். முதலீடு பாதுகாப்பாக இருக்கும். ஆயிரம் ரூபாய் போட்டால் அது ஐநூறாக குறையாது. ஒரே மாதத்தில் இரண்டாயிரமாகவும் ஏறாது. ஒரு வருடத்தில் ஏறக்குறைய 8 சதவிகிதம் பணம் கிடைக்கும். ஆனாலும் வங்கி வைப்பு நிதியில் பணம் போடாமல், இதில் பணம் போடுவது சில சமயங்களில் பயன் அளிக்கும். விவரங்கள் பிறகு

    • தங்கத்தை நாம் வாங்குவதற்கு பதில், நம் சார்பாக வாங்கும் பரஸ்பர நிதி. இவற்றை சற்று முன் பார்த்தோம். இவை தங்கத்தைப் போலவே கொஞ்சம் பாதுகாப்பு குறைந்த முதலீடு

    • கொஞ்சம் பங்குகளிலும் (share) கொஞ்சம் வங்கி வைப்பு நிதியிலும்(debt) பணம் போடும் பரஸ்பர நிதிகள் balanced funds எனப்படும். இவை ஓரளவு பாதுகாப்பு உடையவை

    • இதைத் தவிர, ‘மின்சாரக் கம்பெனிகளில் மட்டும்' முதலீடு செய்யும் பரஸ்பர நிதி, ‘infra structure'இல் மட்டும் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி என்று ஒவ்வொரு வகை வியாபாரத்திற்கும் தனி வகை பரஸ்பர நிதிகள் உள்ளன. இவை sector funds அல்லது துறை சார்ந்த பரஸ்பர நிதி எனப்படும். இவை ஏறக்குறைய பங்குகள் வாங்குவது போல பாதுகாப்பு குறைந்தவை. நமக்கு தேவை இல்லாதவை என்பது என் கருத்து.




நாம் அனைவரும் நமது தேவைகள் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப கீழ்க்கண முதலீடுகளில் பணம் போட வேண்டும் என்பது என் கருத்து.

  1. அன்றாட (அந்த அந்த மாத) செலவுக்குப் பணம். வங்கி சேமிப்பு கணக்கில். இது பாதுகாப்பாக, உடனே (விரைவில்) எடுக்கக் கூடிய பணமாக இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப 1000 அல்லது 5000 அல்லது 10000 என்று வைத்து கொள்ளலாம். அதிகம் பணம் புழங்க வேண்டி இருந்தால் (அடிக்கடி செக் எழுத வேண்டி இருந்தால்) 50000 வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வங்கியிலோ வேறு இடத்திலோ கடன் இருந்தாலும், இது வேண்டும்.

  2. ஓரிரு நாட்களில் தேவைப்படும் பணம். திடீரென்று உடல் நலம் குறைகிறது. மருத்துவ மனையில் ஆபரேசஷன் செய்ய வேண்டும் என்கிறார்கள். இதற்கு விரைவில் (ஓரிரு நாட்களில்) பணம் எடுக்க வேண்டும். முடிந்தால் வைப்பு நிதியிலோ அல்லது debt funds எனப்படும் “வைப்பு நிதியில் வைக்கும் பரஸ்பர நிதியிலோ” ஓரிரு லட்சங்களை வைத்திருக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவு பணம் இல்லை என்றால் என்ன செய்வது? இப்போது வீட்டில் யாருக்காவது பெரிய உடல் நலக்குறைவு வந்தால், அக்கம் பக்கம் கடன் வாங்கி சமாளிக்க வேண்டியது தான். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, ஒரு லட்சமாவது வைப்பு நிதியில் (உடல் நலத்திற்காக) போடுவது பணத்தை பொறுத்த வரை உங்கள் முதல் வேலையாக இருக்க வேண்டும். நீங்கள் அரசாங்க வேலை பார்த்தால், அதில் போடும் PF பி.எஃப். என்பதுவும் இந்தக் கணக்கில் வரும். இதுவும் உங்களுக்கு கடன் இருந்தாலும் வேண்டும் என்பது என் கருத்து.

  3. முதல் இரண்டும் பார்த்துக்கொண்ட பிறகு, உங்களுக்கு கடன் இருந்தால், அதைமுதலில் அடைக்க வேண்டும். வீட்டுக் கடன் மட்டும் விதி விலக்கு (அதாவது அதை அடைக்க வேண்டாம் என்று கூறவில்லை :-), வீட்டுக் கடன் இருந்தாலும் நீங்கள் மற்ற முதலீடுகள் செய்யலாம் என்று பொருள்)

  4. உங்களுக்கு (வீட்டுக் கடன் தவிர வேறு )கடன் இல்லை என்றால் மட்டுமே:

    • தங்கம் வெள்ளியில் முதலீடு. தங்கம் மற்றும் வெள்ளியில் கொஞ்சம் முதலீடு செய்யலாம். நகையாக செய்ய வேண்டாம். தங்கக் காசாக இருக்கலாம். தங்கத்தில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியாக இருக்கலாம். உங்களிடம் இருக்கும் மொத்த சொத்தில் ஐந்து முதல் பத்து சதவீதம் இப்படி சேமிக்க வேண்டும். தங்க நகைகள் இருந்தால், அதில் பாதி மதிப்பைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • நிலம் மற்றும் வீடு. உங்கள் சொத்தில் 30 முதல் 60 சத்விகிதம் வரை வீடாக, நிலமாக முதலீடு செய்யலாம். நீங்கள் குடி இருக்கும் வீடு இதில் அடங்கும்

    • பங்கு சந்தை. பங்குகளில் (share) முதலீடு செய்யும் பரஸ்பர நிதி உங்கள் சொத்தில் 30 முதல் 60 பங்கு வரை இருக்கலாம். உங்களுக்கு ரிடையர் ஆகும் வயது வந்தால், இது குறைவாக (30 சதவிகிதமாக) இருக்க வேண்டும். குறைந்த வயதில், 60 சதவிகிதம் கூட இருக்கலாம்.



பாதுகாப்பு பற்றி மட்டும் இங்கு பார்த்தோம். மற்ற விவரங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Wednesday, March 19, 2008

நிதித் திட்டமிடுதல்-1. (Financial Planning)

இங்கு பொருள் சேமிப்பு பற்றி எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். இதில் வரும் கருத்துக்கள் பெரும்பாலும் blog படிக்கக் கூடிய எல்லோருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். பொதுவாக நம்மிடம் இருக்கும் குறை, அதை தீர்க்கும் வழி ஆகியவற்றை எனக்கு தெரிந்த வரை விளக்குகிறேன்.

குறைகள் :
  1. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு financial planning என்ற ‘பணத்தை பற்றிய தொலை நோக்கு சிந்திப்பு அல்லது திட்டம்' இல்லை என்றே கூறுவேன். எல்லோருக்கும், ‘நாம் நன்றாக சம்பாதிக்க வேண்டும், நன்றாக இருக்க வேண்டும். வீடு, கார் வாங்க வேண்டும், மகன் மகளை நன்றாகப் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுக்க வேண்டும், பெற்றோருக்கும் வைத்திய செலவுகள் செய்ய பணம் வேண்டும்' என்ற எண்ணம் உண்டு. ஆனால், அதற்கு தகுந்த திட்டத்தை வாழ்க்கையில் சம்பாதிக்க தொடங்குவதிலிருந்து ( சுமார் 20-25 வயதிலிருந்து) அமைப்பதில்லை. பலரும் வாழ்க்கை முழுவதுமே இந்த மாதிரி திட்டத்தை அமைப்பதில்லை.

  2. ”திட்டம் இல்லாவிட்டால் என்ன? ஒழுங்காக வருவதை சேமித்தால் போதுமே” என்று நீங்கள் கேட்கலாம். அது ஓரளவுதான் சரி.

    ”ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
    போகாறு அகலாக் கடை”


    என்ற படி கேடு வராது. ஆனால் திட்டமிட்டு பின்பற்றினால், நன்மை அதிகம் வரும். உதாரணமாக, நீங்கள் சாதாரணமாக சாப்பிட்டு இருந்தால் உடல் நலமாக இருக்கும். ஆனால் திட்டமிட்டு regularஆக உடற்பயிற்சிஅல்லது யோகா செய்தால் (அல்லது உடம்பை வளைத்து வீட்டு வேலைகளை செய்தால், ஆபிசுக்கு தினமும் நடந்தே சென்றால், இவற்றில் எது முடியுமோ அதை செயல்படுத்தினால்) மிக ஆரோக்கியமாக இருக்கும். பண விஷயமும் அதைப்போலத்தான். திட்டமிட்டு செயல்படுத்தினால், நன்றாக இருக்கும்

  3. சிலர் திட்டம் அமைத்த போதும், அமல் படுத்த முடியாத படி, நடைமுறைக்கு ஒத்து வராத திட்டத்தை அமைத்து விடுவதால், செயல் படுத்த முடியவில்லை. 25 வயதான ஒருவர், சென்னையில் மாதம் 10000 ரூபாய் சம்பளம் வாங்கினால், அதில் 5000 ரூபாய் சேமிக்க நினைத்தால் அது மிகவும் கடினம். இரண்டு மாதம் வெளியில் ஒன்றும் வாங்காமல், நண்பர்களுடன் செல்லாமல் இருந்தால் முடியலாம். மூன்றாவது மாதம் எல்லாவற்றிற்கும் சேர்த்து செலவு செய்து விடுவார்.


சரி, குறைகளைப் பார்த்தோம். இதை தீர்க்க என்ன வழி? பண விஷயத்தில் சரியாக திட்டம் இட்டு, அதை செயல்படுத்த வேண்டும். அதன் விவரங்கள் என்ன?

என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பதற்கு முன், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம். நீங்கள் finance பற்றிய விவரங்களை ஏற்கனவே பார்த்திருந்தால், இவை எளிதில் புரியும்.

செய்யக்கூடாதது
இவை எல்லாவற்றிற்கும் விளக்கம் பின்னால் அடுத்த பிளாக்குகளில் வரும். காரணம் இல்லாமல் சும்மா ‘இப்படித்தான்' என்று சொல்லப்போவதில்லை :-)

  1. பல காப்பு நிறுவனங்கள் (Insurance companies) வழங்கும் ULIP போன்ற விஷயங்களை எக்காரணம் கொண்டும் வாங்கக் கூடாது.

  2. பரஸ்பர நிதிகளில் வரும் புதிய பரஸ்பர நிதி (New Fund Offer அல்லது NFO) வாங்கக் கூடாது
  3. இன்சூரன்ஸில் term insurance என்பதைத் தவிர வேறு எந்த வகை insuranceஉம் வாங்கக் கூடாது

  4. Term Insurance வாங்காமலும் இருக்கக் கூடாது


ULIP, NFO, Insurance ( term insurance தவிர) ஆகியவற்றால், ஏஜண்டுக்குதான் லாபம். நமக்கு அல்ல. ஏஜண்டுக்கு லாபம் என்பதில் நமக்கு கவலை இல்லை. அவரும் சம்பாதித்து நமக்கும் நல்ல வருவாய் வந்தால் மகிழ்ச்சியே. ஆனால் ULIP, NFO, other insurance ஆகிய விஷயங்களில் நமக்கு அவ்வளவு நல்லது இல்லை. இதற்கு மாற்றாக நாம் காணப்போகும் முதலீடுகளில்தான் நமக்கு நன்மை. அந்த முதலீடுகள் பற்றி ஏஜண்டுகள் நம்மிடம் வாய் திறக்க மாட்டார்கள். ஏனென்றால் அவற்றில்அவர்களுக்கு கமிஷன் குறைவு அல்லது சுத்தமாக இல்லை.

OK, என்ன செய்யக் கூடாது என்று பார்த்து விட்டோம். இதற்கு காரணங்கள் அடுத்த பதிவுகளில் வரும் என்பதையும் நம்புகிறோம். என்ன செய்ய வேண்டும்?

செய்ய வேண்டியது
  1. முதலில் அமைதியாக உட்கார்ந்து, உங்கள் தற்போதைய கையிருப்பு, வருமானம், வருங்காலத்தில் அது எப்படி இருக்கும் (நிரந்தர வேலையா, ஏறக்குறைய நிரந்தர வேலையா, இல்லை 3 மாதத்தில் கண்டிப்பாக முடியக்கூடிய contract jobஆ, வியாபாரம் செய்தால் தற்போதைய வருமானம், வருங்கால வருமானம்) ஆகியவற்றை கணக்கிட வேண்டும். இதை ஓரளவு தோராயமாகத்தான் செய்ய முடியும். குறிப்பாக பல வருடங்கள் கழித்து எப்படி இருக்கும் என்பதை குத்து மதிப்பாகத்தான் சொல்ல முடியும்.

  2. உங்கள் செலவுகள் பற்றியும் மதிப்பிட வேண்டும். குறைந்த பட்சம், உங்கள் மாத செலவு என்ன, வருங்காலத்தில் எப்போது பெரிய அளவில் செலவு இருக்கும் (வீடு வாங்குதல், மகள்/மகன் கல்லூரி, திருமணம், மருத்துவமனையில் எதிர்பாரா செலவு) என்பதை கணக்கிட வேண்டும். இதற்கு சில உதாரணங்களை அடுத்து பார்க்கலாம்.

  3. உங்கள் கையிருப்பு மற்றும் சம்பாதியத்தை வைத்து உங்கள் குறிக்கோள்களை (பணப்பிரச்சனை இல்லாமல்) நிறைவேற்ற முடியுமா? இங்கு வங்கியிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்து எவ்வளவு எதிர்பார்க்கலாம் என்பதை கற்றுக் கொள்வோம். இவை அனைத்தையும் கொண்டு உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்ற முடிந்தால் சரி. இல்லாவிட்டால் ஒன்று குறிக்கோள்களை குறைத்துக் கொள்ள வேண்டும், அல்லது சம்பாதிப்பு மற்றும் சேமிப்பை அதிகரிக்க வேண்டும். அல்லது இரண்டையும் செய்ய வேண்டும்.


"இது என்ன பெரிய விஷயம், இப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல நீ வரவேண்டுமா? எங்களுக்கே தெரியாதா?” என்று கேட்டால்,..... அது நியாயமான கேள்வி. பதில் ஒரே பதிவில், காரணங்களுடன் சொல்ல முடியாது. உங்கள் கேள்விக்கு பதிலாக, வங்கிகளில் சேமிப்பையும், பங்கு சந்தையில் முதலீடும் எப்படி செய்ய வேண்டும்? அதாவது எந்த அளவு முதலீடு செய்ய வேண்டும்? எந்த வகை பரஸ்பர நிதி (Mutual Funds) மற்றும் stock இல் முதலீடு செய்ய வேண்டும், எப்போது விற்பது, வாங்குவது என்பது பற்றி என் கருத்துக்களை அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாம்.