Wednesday, March 19, 2008

நிதித் திட்டமிடுதல்-1. (Financial Planning)

இங்கு பொருள் சேமிப்பு பற்றி எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். இதில் வரும் கருத்துக்கள் பெரும்பாலும் blog படிக்கக் கூடிய எல்லோருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். பொதுவாக நம்மிடம் இருக்கும் குறை, அதை தீர்க்கும் வழி ஆகியவற்றை எனக்கு தெரிந்த வரை விளக்குகிறேன்.

குறைகள் :
  1. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு financial planning என்ற ‘பணத்தை பற்றிய தொலை நோக்கு சிந்திப்பு அல்லது திட்டம்' இல்லை என்றே கூறுவேன். எல்லோருக்கும், ‘நாம் நன்றாக சம்பாதிக்க வேண்டும், நன்றாக இருக்க வேண்டும். வீடு, கார் வாங்க வேண்டும், மகன் மகளை நன்றாகப் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுக்க வேண்டும், பெற்றோருக்கும் வைத்திய செலவுகள் செய்ய பணம் வேண்டும்' என்ற எண்ணம் உண்டு. ஆனால், அதற்கு தகுந்த திட்டத்தை வாழ்க்கையில் சம்பாதிக்க தொடங்குவதிலிருந்து ( சுமார் 20-25 வயதிலிருந்து) அமைப்பதில்லை. பலரும் வாழ்க்கை முழுவதுமே இந்த மாதிரி திட்டத்தை அமைப்பதில்லை.

  2. ”திட்டம் இல்லாவிட்டால் என்ன? ஒழுங்காக வருவதை சேமித்தால் போதுமே” என்று நீங்கள் கேட்கலாம். அது ஓரளவுதான் சரி.

    ”ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
    போகாறு அகலாக் கடை”


    என்ற படி கேடு வராது. ஆனால் திட்டமிட்டு பின்பற்றினால், நன்மை அதிகம் வரும். உதாரணமாக, நீங்கள் சாதாரணமாக சாப்பிட்டு இருந்தால் உடல் நலமாக இருக்கும். ஆனால் திட்டமிட்டு regularஆக உடற்பயிற்சிஅல்லது யோகா செய்தால் (அல்லது உடம்பை வளைத்து வீட்டு வேலைகளை செய்தால், ஆபிசுக்கு தினமும் நடந்தே சென்றால், இவற்றில் எது முடியுமோ அதை செயல்படுத்தினால்) மிக ஆரோக்கியமாக இருக்கும். பண விஷயமும் அதைப்போலத்தான். திட்டமிட்டு செயல்படுத்தினால், நன்றாக இருக்கும்

  3. சிலர் திட்டம் அமைத்த போதும், அமல் படுத்த முடியாத படி, நடைமுறைக்கு ஒத்து வராத திட்டத்தை அமைத்து விடுவதால், செயல் படுத்த முடியவில்லை. 25 வயதான ஒருவர், சென்னையில் மாதம் 10000 ரூபாய் சம்பளம் வாங்கினால், அதில் 5000 ரூபாய் சேமிக்க நினைத்தால் அது மிகவும் கடினம். இரண்டு மாதம் வெளியில் ஒன்றும் வாங்காமல், நண்பர்களுடன் செல்லாமல் இருந்தால் முடியலாம். மூன்றாவது மாதம் எல்லாவற்றிற்கும் சேர்த்து செலவு செய்து விடுவார்.


சரி, குறைகளைப் பார்த்தோம். இதை தீர்க்க என்ன வழி? பண விஷயத்தில் சரியாக திட்டம் இட்டு, அதை செயல்படுத்த வேண்டும். அதன் விவரங்கள் என்ன?

என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பதற்கு முன், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம். நீங்கள் finance பற்றிய விவரங்களை ஏற்கனவே பார்த்திருந்தால், இவை எளிதில் புரியும்.

செய்யக்கூடாதது
இவை எல்லாவற்றிற்கும் விளக்கம் பின்னால் அடுத்த பிளாக்குகளில் வரும். காரணம் இல்லாமல் சும்மா ‘இப்படித்தான்' என்று சொல்லப்போவதில்லை :-)

  1. பல காப்பு நிறுவனங்கள் (Insurance companies) வழங்கும் ULIP போன்ற விஷயங்களை எக்காரணம் கொண்டும் வாங்கக் கூடாது.

  2. பரஸ்பர நிதிகளில் வரும் புதிய பரஸ்பர நிதி (New Fund Offer அல்லது NFO) வாங்கக் கூடாது
  3. இன்சூரன்ஸில் term insurance என்பதைத் தவிர வேறு எந்த வகை insuranceஉம் வாங்கக் கூடாது

  4. Term Insurance வாங்காமலும் இருக்கக் கூடாது


ULIP, NFO, Insurance ( term insurance தவிர) ஆகியவற்றால், ஏஜண்டுக்குதான் லாபம். நமக்கு அல்ல. ஏஜண்டுக்கு லாபம் என்பதில் நமக்கு கவலை இல்லை. அவரும் சம்பாதித்து நமக்கும் நல்ல வருவாய் வந்தால் மகிழ்ச்சியே. ஆனால் ULIP, NFO, other insurance ஆகிய விஷயங்களில் நமக்கு அவ்வளவு நல்லது இல்லை. இதற்கு மாற்றாக நாம் காணப்போகும் முதலீடுகளில்தான் நமக்கு நன்மை. அந்த முதலீடுகள் பற்றி ஏஜண்டுகள் நம்மிடம் வாய் திறக்க மாட்டார்கள். ஏனென்றால் அவற்றில்அவர்களுக்கு கமிஷன் குறைவு அல்லது சுத்தமாக இல்லை.

OK, என்ன செய்யக் கூடாது என்று பார்த்து விட்டோம். இதற்கு காரணங்கள் அடுத்த பதிவுகளில் வரும் என்பதையும் நம்புகிறோம். என்ன செய்ய வேண்டும்?

செய்ய வேண்டியது
  1. முதலில் அமைதியாக உட்கார்ந்து, உங்கள் தற்போதைய கையிருப்பு, வருமானம், வருங்காலத்தில் அது எப்படி இருக்கும் (நிரந்தர வேலையா, ஏறக்குறைய நிரந்தர வேலையா, இல்லை 3 மாதத்தில் கண்டிப்பாக முடியக்கூடிய contract jobஆ, வியாபாரம் செய்தால் தற்போதைய வருமானம், வருங்கால வருமானம்) ஆகியவற்றை கணக்கிட வேண்டும். இதை ஓரளவு தோராயமாகத்தான் செய்ய முடியும். குறிப்பாக பல வருடங்கள் கழித்து எப்படி இருக்கும் என்பதை குத்து மதிப்பாகத்தான் சொல்ல முடியும்.

  2. உங்கள் செலவுகள் பற்றியும் மதிப்பிட வேண்டும். குறைந்த பட்சம், உங்கள் மாத செலவு என்ன, வருங்காலத்தில் எப்போது பெரிய அளவில் செலவு இருக்கும் (வீடு வாங்குதல், மகள்/மகன் கல்லூரி, திருமணம், மருத்துவமனையில் எதிர்பாரா செலவு) என்பதை கணக்கிட வேண்டும். இதற்கு சில உதாரணங்களை அடுத்து பார்க்கலாம்.

  3. உங்கள் கையிருப்பு மற்றும் சம்பாதியத்தை வைத்து உங்கள் குறிக்கோள்களை (பணப்பிரச்சனை இல்லாமல்) நிறைவேற்ற முடியுமா? இங்கு வங்கியிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்து எவ்வளவு எதிர்பார்க்கலாம் என்பதை கற்றுக் கொள்வோம். இவை அனைத்தையும் கொண்டு உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்ற முடிந்தால் சரி. இல்லாவிட்டால் ஒன்று குறிக்கோள்களை குறைத்துக் கொள்ள வேண்டும், அல்லது சம்பாதிப்பு மற்றும் சேமிப்பை அதிகரிக்க வேண்டும். அல்லது இரண்டையும் செய்ய வேண்டும்.


"இது என்ன பெரிய விஷயம், இப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல நீ வரவேண்டுமா? எங்களுக்கே தெரியாதா?” என்று கேட்டால்,..... அது நியாயமான கேள்வி. பதில் ஒரே பதிவில், காரணங்களுடன் சொல்ல முடியாது. உங்கள் கேள்விக்கு பதிலாக, வங்கிகளில் சேமிப்பையும், பங்கு சந்தையில் முதலீடும் எப்படி செய்ய வேண்டும்? அதாவது எந்த அளவு முதலீடு செய்ய வேண்டும்? எந்த வகை பரஸ்பர நிதி (Mutual Funds) மற்றும் stock இல் முதலீடு செய்ய வேண்டும், எப்போது விற்பது, வாங்குவது என்பது பற்றி என் கருத்துக்களை அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாம்.

2 comments:

புரட்சி தமிழன் said...

ரிலையன்ஸ் நிருவனத்தில் முதலீடு செய்வதையும் குறைத்துக்கொள்ளலாம் அதன் செயல்பாடுகள் மக்களை மறைமுகமாக ஏமாற்றுவதாக உள்ளது என்னுடைய கணக்கின்படி ரிலையன்ஸ் பங்குகளை வைத்திருப்பவர்கல் பெருத்த ஏமாற்றத்தை அடையக்கூடும்

S. Ramanathan said...

கருத்துக்கு நன்றி புரட்சித் தமிழன்.

ரிலையன்ஸ் நிறுவனம் பற்றி இது போல எனது நண்பர் மா சிவக்குமார் அவர்களும் எழுதி இருக்கிறார். ரிலையன்ஸின் மட்டும் அல்ல, எந்த தனி நிறுவனத்திலும் பங்கு வாங்கக் கூடாது என்பது என் கருத்து. அதற்கு காரணம் பங்கு பாதுகாப்பு மிகக் குறைந்த முதலீடு. அந்த நிறுவனத்தைப் பற்றி எனக்கு நல்ல எண்ணம் இருந்தாலும் சரி, அது மோசமான நிறுவனம் என்று நினைத்தாலும் சரி.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். “பெரிய கம்பெனிகள்' என்பதில் பல ரிலையன்ஸ் நிறுவனங்கள் வருகின்றன. எனவே, நீங்கள் SBI அல்லது Franklin Templeton, Tata, ICICI, Birla Sun Life, DBS, என எந்த பரஸ்பர நிதியை வாங்கினாலும் அவை ரிலையன்ஸிலும் கொஞ்சம் முதலீடு செய்து இருக்கும். அதைப்போலவே, ரிலையன்ஸ் பரஸ்பர நிதியும் , ரிலையன்ஸ் கம்பெனி பங்குகளுடன் (சுமார் 5 அல்லது 10%), மற்ற கம்பெனி பங்குகளையும் பெருமளவு வாங்கி இருக்கும்.
இதை யோசித்தால், ரிலையன்ஸ் பரஸ்பர நிதி (பங்கு அல்ல, பரஸ்பர நிதி) வாங்கினாலும், வேறு பரஸ்பர நிதி வாங்கினாலும் மறைமுகமாக ரிலையன்ஸை வாங்குகிறோம். ITC என்ற புகையிலை விற்கும் நிறுவனத்தையும் மறைமுகமாக வாங்குகிறோம். இதை முழுவதும் தவிர்ப்பது இயலுமா என்று தெரியவில்லை. பரஸ்பர நிதியே வாங்காமல் இருந்தால்தான் முடியும்.

என்ன, ரிலையன்ஸ் பரஸ்பர நிதியை வாங்காவிட்டால், ”பெயரளவில்” நாம் ரிலையன்ஸை அல்லது ITC வாங்கவில்லை என்று நினைத்துக் கொள்ளலாம். தோண்டிப் பார்த்தால் மறைமுகமாக வாங்கி இருக்கிறோம் என்பது புரியும்.