Wednesday, March 26, 2008

பரஸ்பர நிதி (வைப்பு நிதி) (Debt Mutual Funds)

(மங்களூர் சிவா, உங்கள் கேள்வி/கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இப்பதிவு. இதை எழுதததூண்டியதற்கு நன்றி) .

பரஸ்பர நிதிகளில் பல வகைகள் உண்டு என்பதை முன்பு பார்த்தோம். சற்று எளிமைப் படுத்தினால்

  1. பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி. எல்லா வகைப்பங்க்குகளையும் வாங்கும் நிதிக்கு Diversified Equity Fund என்று பெயர். பங்குகள் விலை ஏறினால் இவற்றின் மதிப்பு ஏறும். இறங்கினால், இவற்றின் மதிப்பு இறங்கும்.
    • கடந்த மூன்று மாதங்களில் (ஜனவரி 2008 முதல் மார்ச் 2008 வரை) மார்க்கெட் சரிந்த பொழுது, இந்த வகைப் பரஸ்பர நிதிகளின் மதிப்பும் குறைந்திருக்கும்

  2. வைப்பு நிதி (Fixed Deposit)இல் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள். இவை பற்றி கீழே விவரமாகப் பார்க்கலாம்

  3. கலப்பு நிதிகள் (Hybrid funds or Balanced Funds). இவை கொஞ்சம் பங்குகளிலும் கொஞ்சம் வைப்பு நிதிகளிலும் முதலீடு செய்யும்.

  4. துறை சார் நிதி (Sector Funds). இவை பங்குகளிலேயே குறிப்பிட்ட துறை பங்குகளை மட்டும் வாங்கும்.



வைப்பு நிதி பரஸ்பர நிதி என்றால் என்ன?

முதலில், பெரும்பாலான மக்களுக்கு இது தேவையில்லை. நீங்கள் முதலீடு செய்ய இந்நிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்வம் இருந்தால் தொடர்ந்து படிக்கவும்.

உங்கள் பணத்தை வைப்பு நிதியில் (Fixed Deposit) போடலாம் என்றால், அதற்கு பல வங்கிகளில் போடலாம். ஒவ்வொரு வங்கியும் ஒரு வட்டி கொடுக்கும். State Bank of India ஒரு வருடத்திற்கு 8 சதவிகிதம் கொடுத்தால் இன்னொரு வங்கி 7 % கொடுக்கலாம்; மற்றும் ஒரு வங்கி 9% கொடுக்கலாம். கொஞ்சம் வேறுபாடு இருக்கலாம். இது தவிர கூட்டுறவு வங்கிகளும் வைப்பு நிதியில் 10% கூட கொடுக்கலாம். ஒரேடியாக எல்லோரும் 8% தரும் பொழுது ஒரு வங்கி 25% தராது.

இது தவிர சில கம்பெனிகளும் வைப்பு நிதிக்கு வட்டி கொடுக்கும். Cholamandala, ESSAR, (இன்னும் பல, எனக்கு மறந்து விட்டது) இவற்றிற்கு பணம் தேவைப்பட்டால், ஒன்று வங்கியிடம் சென்று கடன் கேட்கலாம். அல்லது பொதுமக்களிடம் கேட்கலாம். வங்கியில் கேட்டால் மிக அதிக வட்டிக்குதான் கடன் கிடைக்கும். அதற்கு பதில் பொதுமக்களிடம் 12% அல்லது 13% என்று கடன் வாங்கலாம்.

எல்லா கம்பெனிகளும் நினைத்தவுடன் இப்படி பொதுமக்களிடம் வாங்க முடியாது. சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் வாங்க வேண்டும். ஆனால் இவற்றில் வங்கிகளில் உங்களுக்கு கிடைக்கும் வட்டியை விட கொஞ்சம் அதிகம் கிடைக்கும். இல்லாவிட்டால் நீங்கள் இந்த நிறுவனங்களில் பணம் போடாமல் நேராக வங்கியில் போட்டுவிடுவீர்களே!

இந்த நிறுவனங்களில் வைக்கும் வைப்பு நிதிக்கு கொஞ்சம் பாதுகாப்பு குறைவு. அதாவது கம்பெனி திவாலானால், உங்கள் முதலுக்கு மோசம் வரலாம். ஆனால் வட்டி அதிகம்.

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால், 50 லட்சத்தை SBIஇல் 8% வட்டிக்கும், 30 லட்சத்தை கூட்டுறவு வங்கியில் 10% வட்டிக்கும், 10 லட்சத்தை ஒரு நிறுவனத்தில் 12% வட்டிக்கும், கடைசி 10 லட்சத்தை வேறு நிறுவனத்தில் 13% வட்டிக்கும் வைப்பு நிதியாக போடலாம். இதனால், மொத்த முதலும் போய் விடாது. அதேசமயம் வட்டியும் 8% விட கொஞ்சம் அதிகம் கிடைக்கும். தப்பித்தவறி ஒரு கம்பெனி திவாலானால், உங்கள் பணம் முழுதும் வராமல் , ஒரு 10% இழப்பில் கூட (10 லட்சம் என்பது வட்டியுடன் 11.2 அல்லது 11.3 லட்சம் வருவதற்கு பதில் 9 லட்சமாக வரும்) வரலாம். ஆனால், 1 கோடி பணத்தில், SBIஇல் 4 லட்சமும் (50 லட்சத்திற்கு 8% வட்டி ) , கூட்டுறவு வங்கியில் 3 லட்சமும் (30 லட்சத்திற்கு 10% வட்டி), ஒரு நிறுவனத்தில் 1.2 லட்சமும் (10 லட்சத்திற்கு 12% வட்டி) லாபமாகக் கிடைக்கும். ஒரு நிறுவனத்தில் 1லட்சம் நட்டம். மொத்தத்தில் 7.2 லட்சம் லாபம். அதாவது 7.2% வட்டி.










எண் முதலீடு வங்கி வட்டி விகிதம்வருமானம்
1. 50 லட்சம்SBI 8%4 லட்சம்
2. 30 லட்சம்கூட்டுறவு 10%3 லட்சம்
3. 10 லட்சம் கம்பெனி 112%1.2 லட்சம்
4. 10 லட்சம்கம்பெனி 213%கம்பெனி திவாலாகி 1 லட்சம் நட்டம்
மொத்தம் 1 கோடி7.2% 7.2 லட்சம்

இதே கம்பெனி திவால் ஆகாமல் ஒழுங்காக பணத்தைக் கொடுத்தால், 1 லட்சம் நட்டத்திற்கு பதில், 1.3 லட்சம் லாபம் கூடி இருக்கும். அதாவது 9.5 % வட்டி.

நிற்க. கோடி ரூபாய் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் இந்த பிளாக்கை படிக்க மாட்டார்கள் என நினக்கிறேன். ஆயிரம் ரூபாயும் ஐயாயிரம் ரூபாயும் வைத்து இருப்பவர்கள் என்ன செய்வது?

இப்படி பலர் இருப்பதால், இவர்கள் பணத்தை எல்லாம் சேர்த்து பல கோடிகள் ஆன பின்னர், அவற்றை வட்டிக்கு விடலாம். இதுதான் debt fund எனப்படும் “வைப்பு நிதி பரஸ்பர நிதி”.

இதற்கும் மார்க்கெட்டுக்கும் நேரடியாக சம்பந்தம் இல்லை. மார்கெட் விழுந்தாலும் மேலே பறந்தாலும் கவலை இல்லை. ஆனால், வங்கியில் வட்டி விகிதம் மாறினால், இவற்றின் மதிப்பு மாறும். ஏனென்றால் வங்கி வைப்பு நிதி (மற்றும் நிறுவன வைப்பு நிதி )தான் இதற்கு underlying asset (அடிப்படை சொத்து?)

வங்கியின் வட்டி விகிதம் திடீரென அதிகரித்தால் இதன் மதிப்பு கொஞ்ச காலம் சிறிதளவு குறையும். நான் தவறாக எழுதவில்லை. வட்டி விகிதம் அதிகரித்தால் இதன் மதிப்பு சிறிதளவு குறையும், அதிகரிக்காது. இதற்கு காரணம் என்ன?

நீங்கள் 100 ரூபாயை வங்கியில் ஒரு வருட வைப்பு நிதியாக ஜனவரி 1ல் (2008இல்) போட்டால், உங்களிடம் ஒரு பத்திரத்தில் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் தருவதாக எழுதிக் கொடுப்பார்கள். அதே நாள் இன்னொருவர் சென்று 100 ரூபாய் போட்டாலும் அவருக்கும் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் கொடுப்பதாக எழுதித் தருவார்கள். அதாவது 10 சதவிகித வட்டி.

மறுநாள் திடீரென்று வட்டி 5 சதவிகிதம் என்று குறைவதாக கற்பனை செய்யவும். (நடைமுறையில் ஒரேடியாக குறையாது. கணக்கு சுலபமாக இருக்க இப்படி கற்பனை செய்வோம்). அப்போது உங்கள் கையில் இருக்கும் பத்திரத்தின் மதிப்பு என்ன தெரியுமா?

5% வட்டியில் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் வேண்டும் என்றால், நீங்கள் 104.75 ரூபாய் போட வேண்டும். அப்போதுதான் 5% வட்டியில் 110 ரூபாயாக ஒரு வருடத்தில் மாறும். 100 ரூபாய் போட்டால் அது 105 ரூபாயாக மாறும். அதனால், வட்டி விகிதம் குறைந்ததால், உங்கள் பத்திரத்தின் மதிப்பு ஏறக்குறைய 4.75 % கூடிவிட்டது.

இதே வட்டி குறையாமல் கூடி இருந்தால்? 10% பதில் 20% என மாறிவிட்டால், உங்கள் மையில் இருக்கும் பத்திரத்தின் மதிப்பு 91.67 ரூபாய்தான்? ஏனென்றால் 91.67 ரூபாய் போட்டால், ஒரு வருடத்தில், 20% வட்டியில் அது 110 ரூபாய் ஆகிவிடும்.

இப்போது,
  1. உங்கள் முதல் முற்றிலும் முழுகவில்லை என்பதை கவனிக்கவும். 100 ரூபாய் என்பது கொஞ்சம் மதிப்பு குறையலாம் அல்லது கூடலாம். ஆனால் திவால் ஆகாது.


  2. வட்டி விகிதம் இப்படி எல்லாம் எகிறவோ இறங்கவோ செய்யாது. கால் விகிதம் மாறவே மாதக்கணக்காக ஆகலாம். அதனால் உங்கள் இழப்பு அல்லது லாபம் அவ்வளவாக மாறாது. நான்
    சும்மா கணக்கு சுலபமாக இருக்க இப்படி பெரிய மாற்றங்களைக் கற்பனை செய்து கொள்ள சொன்னேன்.


  3. இந்த பரஸ்பர நிதிகளை திவாலாகும் கம்பெனிகளில் வட்டிக்கு விட மாட்டார்கள். அதனால் முதலுக்கு மோசம் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.



சரி, இவ்வளவு சித்திரவதை ஏன்? பேசாமல் வங்கியில் வைப்பு நிதி வைத்து விட்டு போகவேண்டியதுதானே?

அதுதான் பெரும்பாலானவர்களுக்கு சரி. சில சமயங்களில் சிலருக்கு இதில் நன்மை உண்டு.

1. உங்கள் வைப்பு நிதி வட்டிக்கு வரி பிடிப்பார்கள். இந்த பரஸ்பர நிதியில், நீங்கள் இவற்றை விற்கும் போது மட்டுமே வரி கட்ட வேண்டும். அதுவும் நீங்கள் கட்ட வேண்டும். அவர்கள் பிடிக்க மாட்டார்கள்.

அதனால், 3 வருடம் விற்காமல் இருந்தால், அதுவரை வரி கட்ட வேண்டியதில்லை. வருடா வருடம் அவர்கள் பணம் பிடிப்பதும், நாம் மேலே கட்டுவது அல்லது திரும்பக் கேட்பது என்ற தொல்லை இல்லை.

2. ஒரு வருடத்திற்குள் விற்றால் முழு வரி கட்ட வேண்டும். ஒரு வருடம் கழித்து விற்றால், வரி குறைவு. இதற்கு முன் 10% என இருந்தது, இப்போது ப.சிதம்பரம் 15% என மாற்றி இருக்கிறார் என கேள்வி. (இதை சரி பார்க்க வேண்டும். சுட்டிக் காட்டிய மங்களூர் சிவாவிற்கு நன்றி).

3. ஒவ்வொரு வருடமும் வைப்பு நிதியை renew செய்ய வேண்டும். இதில் அந்தக் கவலை கிடையாது.

4. வைப்பு நிதியை ஒரு வருடத்திற்கு என நினைத்து போடுகிறீர்கள். ஏதோ அவசரத்திற்கு அதை 3 மாதங்களில் எடுத்தால், குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும். பரஸ்பர நிதியில் அப்படி இல்லை. தினமும் சிலர் பணம் போடுவார்கள், சிலர் பணம் எடுப்பார்கள். அதனால் ஒவ்வொரு நாளும் சில வைப்பு நிதிக் கணக்கு துவங்கப்படும், சில வைப்பு நிதிகள் (mature ஆனவை) முடிக்கப்படும். முடிக்கப்பட்ட நிதியில் இருந்து பணத்தை எடுத்து உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். எல்லோருக்கும் ஓரளவு நல்ல வட்டி வரும்.

ஆனால், பெரும்பாலான மக்களுக்கு இதனால் பெரிய லாபம் இல்லை என்பதால், நான் இதை வலியுறுத்தவில்லை.
பின் குறிப்பு
இதிலேயே short-term, long-term , very short term (liquid) என்றெல்லாம் பிரிவுகள் உண்டு. இவை இன்னும் நுணுக்கமான வித்தியாசங்கள் கொண்டவை. கடைசியில் வருவாயை பார்த்தால் பெரிய வித்தியாசம் இருக்காது. பல கோடி ரூபாயை fixed deposit இல் போட விரும்புவர்கள்தான் அந்த நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தேவையில்லை.

3 comments:

மங்களூர் சிவா said...

Equity Fund என நான் குழப்பிவிட்டேனா இல்லை நான் Debt Fund ஐ சொல்கிறேன் என நீங்கள் குழம்பிவிட்டீர்களா?

எதா இருந்தாலும் பரவாயில்லை.

/
ஒரு வருடத்திற்குள் விற்றால் முழு வரி கட்ட வேண்டும். ஒரு வருடம் கழித்து விற்றால், வரி குறைவு. இதற்கு முன் 10% என இருந்தது, இப்போது ப.சிதம்பரம் 15% என மாற்றி இருக்கிறார் என கேள்வி.
/

இங்கு எஸ்டிடி யை நீங்கள் குழப்பியிருக்கிறீர்கள்.

S. Ramanathan said...

நன்றி மங்களூர் சிவா. இது எஸ்.டி.டி. அல்ல. Short term capital gain எனப்படும் 'ஒரு வருடத்திற்குள் பங்கையோ, பங்கில் பணம் போடும் பரஸ்பர நிதியையோ விற்றால், அதில் கிடைக்கும் லாபத்திற்கான வரி'. அது முன்னர் 10% இருந்தது. இப்போது புது பட்ஜெட்டில் 15% ஆக அதிகரித்து உள்ளது.

எஸ்.டி.டி. என்பது நாம் பங்கை வாங்கினாலோ விற்றாலோ அரசுக்கு உடனே கட்டும் வரி.

நான் குறிப்பிடுவது வருமான வரி. மறுபடி நிதானமாக படித்து வாருங்கள்.

S. Ramanathan said...

முன் பின்னூட்டத்தில் ஒரு திருத்தம்.

கீழே வரி என்று சொல்வதெல்லாம் வருமான வரியாகும்.

வைப்பு நிதி-பரஸ்பர நிதி வாங்கி, ஒரு வருடத்திற்குள் விற்றால், லாபத்திற்கு முழு வருமான வரி உண்டு.

ஒருவருடம் கழித்து விற்றால், 10% வரி என்று இருந்தது. இப்போது எப்படி என்று தெரியவில்லை.

பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியை வாங்கி, ஒரு வருடத்திற்குள் விற்றால், லாபத்தில் போன வருடம் வரை (இந்த மார்ச் 2008 வரை) 10% வரி. அடுத்த வருடம் முதல் 15% வரி.

இவற்றை ஒரு வருடம் கழித்து விற்றால், வரி இல்லை.

பங்குகளை வாங்கி விற்றால், அதற்கும் பங்குகளை வாங்கும் பரஸ்பர நிதி போலவே வருமான வரி சட்டம். அதாவது 1 வருடத்திற்குள் லாபம் பார்த்தால் இதற்கு முன் 10% வரி, இனி 15% வரி. 1 வருடத்திற்கு மேல் லாபம் பார்த்தால் வரி இல்லை.