Friday, March 28, 2008

பரஸ்பர நிதியில் செலவு(நட்டம்) (Mutual Fund Expenses)

பரஸ்பர நிதியை நாம் வாங்கும் பொழுது, நூறு ரூபாய்க்கு வாங்கினால், எல்லா சமயத்திலும் நமக்கு நூறு ரூபாய்க்கான யூனிட்டுகளைத் தருவதில்லை. பல சமயங்களில் ‘இந்த செலவு, அந்த செலவு' என்று கணக்கு காண்பித்து 97 ரூபாய், 98 ரூபாய்க்கான யூனிட்டுகளைத்தான் தருவார்கள். அதை விற்றாலும், உடனே நமக்கு 97 அல்லது 98 ரூபாய் வராது. அதிலும் ‘விற்கும் செலவு' என்று கணக்கு காண்பிப்பார்கள். இதன் விவரங்களை கீழே பார்க்கலாம்.

சில செலவுகள் தவிர்க்க முடியாதவை. சில தவிர்க்கக் கூடியவை. எல்லா செலவுகளையும் அவர்கள் கண் முன் காண்பிப்பதில்லை. சில தெளிவாகத் தெரியும், சிலவற்றை வருடாந்திர அறிக்கையின் உள்ளே புதைத்து வைத்து இருப்பார்கள். எது என்ன என்ற விவரத்தை ஒரு முறை தெளிவாகத் தெரிந்து கொள்வது நமக்கு நல்லது.

இந்த செலவுகள் அனைத்திலும் நமக்கு இழப்பு என்பதால் தலைப்பில் ‘நட்டம்' என எழுதி இருக்கிறேன். பரஸ்பர நிதி வாங்கினாலே நட்டம் என நினைக்க வேண்டாம்.


  1. Entry Load. (நுழையும்?) வாங்கும் செலவு. பரஸ்பர நிதிகளை வாங்கும்பொழுது உங்களுக்கு வாங்கித்தரும் எஜண்ட் கமிஷன். இது பல சமயங்களில் 2% முதல் 2.5% வரை இருக்கும்.
    • உதாரணமாக , பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளில், இது 2 முதல் 2.5% வரை இருக்கும். ஆனால், index fund எனப்படும் பரஸ்பர நிதி யில் குறைவாக இருக்கலாம். 1% அல்லது பூஜ்யமாகவும் இருக்கும். (இவையும் பங்குகளில்தான் முதலீடு செய்யும். பெரிய கம்பெனியில் மட்டும் முதலீடு செய்யும். அடிக்கடி பங்குகளை வாங்கி விற்க மாட்டார்கள்)
    • வைப்பு நிதியில் முதலீடு செய்யும் Debt fundsஇல் இது 1% அல்லது 0% ஆக இருக்கும். பெரும்பாலும் 0% ஆகத்தான் இருக்கும்.

    பங்கில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியானாலும் (Equity funds) வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி (Debt fund) ஆனாலும், வேறு (கலப்பு நிதி, துறைசார் நிதி) என எந்த வகை நிதி ஆனாலும், நேரடியாக நீங்கள் நிதியை வாங்கினால், இந்த கமிஷன் எடுக்க மாட்டார்கள். இது சமீபத்தில் அரசு உத்தரவுப் படி நடக்கிறது (அரசு உத்தரவு என எளிமையாக்கி சொல்கிறேன். இல்லாவிட்டால், SEBI என்றால் என்ன, அதற்கும் அரசிற்கும் உள்ள தொடர்பு என முடிவில்லாமல் எழுதிக்கொண்டே போகவேண்டி இருக்கும்). இதற்கு முன் (2007 வரை), நீங்கள் நேரடியாக வாங்கினால் கூட 'ஏஜண்ட் கமிஷனாகிய இந்த செலவை' விற்கும் நிறுவனமே வெட்கமில்லாமல் நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டது.

    உங்களுக்கு ஒரு ஏஜண்ட் வந்து, (அ) பரஸ்பர நிதிகளின் விவரங்களை எடுத்துக் கூறி, (ஆ) உங்கள் தேவைகளைக் கணக்கில் கொண்டு, ‘இந்த நிதியில் முதலீடு செய்யுங்கள்' என உங்கள் நன்மையை முதலில் வைத்து சொன்னால் (அதாவது என்னைப்போல இருந்தால் :-) ), அவர் உங்களுக்கு உதவி செய்கிறார். குறைந்த பட்சம் உங்களுக்கு விண்ணப்ப படிவத்தை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து நீங்கள் நிரப்பியதை சரிபார்த்து நிறுவனத்திற்கு எடுத்து சென்றால், கொஞ்சமாவது உதவி செய்கிறார். அவருக்கு கமிஷன் கொடுப்பது சரியானது. நாமே ஆராய்ந்து முடிவுக்கு வந்து பரஸ்பர நிதியை வாங்கும்பொழுது, நிறுவனங்கள் ஒன்றுமே செய்யாமல் நம் பணத்தை எடுத்து தங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொளவது எந்த வகையில் நியாயம்? அதனால்தான் நிறுவனங்கள் வெட்கமில்லாமல் எடுத்துக்கொண்டன என்று சொல்கிறேன்.

    ஒவ்வொரு பரஸ்பர நிதியிலும், இது ”entry load" இவ்வளவு என்று வெளிப்படையாகத் தெரியும் படி கொடுத்திருப்பார்கள்.


  2. Exit Load, (வெளியேறும்)விற்கும் செலவு. இது விற்கும் செலவு எனபதற்கு பதிலாக, ‘விற்பதற்கான தண்டனை' என்று சொல்லலாம். பெரும்பாலான நிறுவனங்கள் வாங்கும் செலவு பூஜ்யம் என்று சொன்னால், விற்கும் செலவில் தீட்டி விடும். இவையும் பங்கு-பரஸ்பர நிதிகளிலும், வைப்பு நிதி பரஸ்பர நிதிகளிலும் இருக்கும். பெரும்பாலும் 0% என்று இருந்தாலும், சில சமயங்களில் இது 1 அல்லது 2% ஆக இருக்கும்.

    பல சமயங்களில் இது condition உடன் வரும். அதாவது நீங்கள் ஒரு பரஸ்பர நிதியை வாங்கி 6 மாதத்திற்குள் விற்றால் அல்லது 3 மாதத்திற்குள் விற்றால், அல்லது 1 வருடத்திற்குள் விற்றால், விற்கும் செலவு என்ற பெயரில் 1% அல்லது 2% தர வேண்டி இருக்கும். அந்த காலக் கெடுவை தாண்டி விட்டால், இது பூஜ்யம் ஆகிவிடும்.

    எனது கருத்துப்படி நீங்கள் 3 வருடத்திற்கு பரஸ்பர நிதியை வைத்திருந்தால், ஏறக்குறைய எல்லா நிதிகளிலும் இது பூஜ்யம் ஆகிவிடும். அதனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

    விற்கும்பொழுது நிறுவனத்திற்கு செலவு என்று ஒன்றும் கிடையாது. ஆனால், அவற்றின் திட்டம் நெடுங்காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும். நாம் உடனடியாக பணத்தை கேட்டால் அதற்கு penalty ஆக கொஞ்சம் எடுத்துக்கொள்வார்கள். இது ஓரளவு நியாயம் என நினைக்கிறேன்.

    எடுத்துக்காட்டாக, ஒரு நண்பரும் நீங்களும் சேர்ந்து பணம் போட்டு வியாபாரம் செய்கிறீர்கள். உங்கள் திட்டப்படி, ஆளுக்கு 1 லட்சம் போட்டு தொடங்குகிறீர்கள். ஆரம்பித்த மறு நாளே லாபம் வராது. ஒரு வருடம் கழித்துதான் போட்ட பணமே திரும்ப எடுக்க முடியும். இரண்டாம் ஆண்டிலிருந்து ஓரளவு லாபம் வரும் என்று கணக்கிடுகிறீர்கள்.

    6 மாதத்தில், நண்பர் வந்து ‘எனக்கு இது வேண்டாம் என்று தோன்றுகிறது. எனது ஒரு லட்சத்தை கொடுத்து விடு' என்று சொன்னால் என்ன சொல்வோம்? ‘இன்னம் ஆறு மாதம் பொறு, போட்ட பணத்தை எடுத்து விடுவோம். உனக்கும் எனக்கும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம்.' என்று சொல்வோம். நண்பர் ‘இல்லை, இப்பொழுதே கொடு' என்று கேட்டால் வியாபாரத்தை இழுத்து மூடி, வந்த பணத்தை பிரித்துக் கொள்வோம். அப்போது, போட்ட பணத்தைவிட கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.

    அதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை திரும்ப எடுத்தால், கொஞ்சம் penalty கொடுப்பது அநியாயமாக எனக்கு தோன்றவில்லை.

    ஒவ்வொரு பரஸ்பர நிதியிலும் இதுவும் வெளிப்படையாக ‘விற்கும் செலவு இவ்வளவு' என்று கொடுத்திருப்பார்கள்.

    அரசின்விதிப்படி, வாங்கும் செலவும் விற்கும் செலவும் சேர்த்து 6%க்கு மேல் போகக்கூடாது. ஏதோ நம் நல்ல நேரம், இதுவரை 2.5% அல்லது 3.5% மேல் நிறுவனங்கள் கேட்கவில்லை. அரசு அனுமத்தித்து இருக்கிறதே என்று மேலும் தீட்டவில்லை


  3. CDSC இதுவும் மேலே சொன்ன Exit load/ விற்கும் செலவு போன்றது. இதன் விரிவு Contingent Deferred Sales Charge. தமிழில் மொழி பெயர்க்கும் அளவு முக்கியமானது இல்லை. இப்பொழுது பெரும்பாலும் நிறுவனங்கள் இதை வாங்குவதில்லை. 'விற்கும் செலவு' என்று மொத்தமாக சொல்லி விடுகிறார்கள். இதுவும், 6 மாதத்திற்குள் விற்றால் 1%, ஒரு வருடத்திற்குள் விற்றால் 0.5% என்று இருக்கும். பல வருடங்கள் வைத்திருப்பவர்களுக்கு கவலை இல்லை.

    இதுவும் வெளிப்படையாகக் கொடுத்திருப்பார்கள். இது கொடுக்காவிட்டால், இது பூஜ்யம் (அல்லது விற்கும் செலவில் சேர்க்கப்பட்டு விட்டது) என அறிந்து கொள்ளலாம்.

  4. Expenses , மற்ற செலவுகள் இது பரஸ்பர நிதி நிறுவனம், ஆபிஸ் நடத்துவதற்கான செலவு. ஆபிஸில் வாடகை அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளம் இதையெல்லாம் நாம்தான் கொடுக்க வேண்டும். குறிப்பாக, நமது பரஸ்பர நிதியை நடத்துபவர் (Fund Manager) சம்பளம் இதிலிருந்துதான் போடும். இது ஒவ்வொரு நிதியிலும் ஒவ்வொரு ஆண்டிலும் மாறும்.

    இது எவ்வளவு என்பது வெளிப்படையாகத் தெரியாது. தோண்டித் துருவிப் பார்த்தால்தான் தெரியும். இது 1% அல்லது கீழே இருப்பது நல்லது. சில பரஸ்பர நிதிகள் சிறிய கம்பெனிகளில் (small cap) முதலீடு செய்யும். அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து நல்ல கம்பெனியை தேர்ந்தெடுப்பது கொஞ்சம் கடினம் என்பதால், அப்படிப்பட்ட பரஸ்பர நிதிகள் expenseஐ அதிகமாக எடுத்துக் கொள்ளும்.


  5. புது ஃபண்ட் செலவு (New Fund Offer or NFO expenses) புதிதாக ஃபண்ட் ஆரம்பிக்கும்பொழுது Initial Expenses அதாவது ”தொடங்கும் செலவுகள்” என்று கொஞ்சம் பணம் எடுத்துக்கொள்வார்கள். பழைய நிதியை அதிகம் விளம்பரம் செய்ய வேண்டியதில்லை. புதிய நிதி வருவது பற்றி எல்லோருக்கும் தெரிவிக்க விளம்பரம் செய்ய வேண்டும், எஜண்டுகளுக்கு சொல்ல வேண்டும் என்பது போன்ற செலவுகள் இதில் அடங்கும்.
    • பெரும்பாலும் புது நிதிகளில் வாங்கும் செலவு (entry load) இருக்காது. ஆனால், அதற்கு பதில் இந்த தொடங்கும் செலவு இருக்கும். இது ”வாங்கும் செலவை” விட அதிகமாக இருக்கும்.
    • நீங்கள் பழைய நிதியை நேரடியாக வாங்கினால், ‘வாங்கும் செலவு' கிடையாது. புதிய நிதியை நேரடியாக வாங்கினாலும், ஏஜண்ட் மூலம் வாங்கினாலும் ‘தொடங்கும் செலவு' உண்டு. 'புதிய நிதியை வாங்க வேண்டாம்' என்று நான் சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்



சுருக்கமாக,











செலவு வகை அளவு வெளிப்படையாகத் தெரியுமா? தவிர்க்க முடியுமா? மற்ற விவரங்கள்
நுழையும்/ வாங்கும் செலவு (Entry Load) 0% முதல் 2.5% வரை தெரியும் நேரடியாக வாங்கினால் இந்த செலவு இல்லை
வெளியேறும்/விற்கும் செலவு (Exit Load) 0% முதல் 2% வரை தெரியும் குறிப்பிட்ட காலம் கழித்து (1 வருடம் அல்லது 6 மாதம் கழித்து) விற்றால் இந்த செலவு இல்லை
CDSC 0% முதல் 1% வரை தெரியும். இது கொடுக்காவிட்டால், இதை ‘விற்கும் செலவில்' சேர்த்திருக்கிறார்கள் என்று பொருள் குறிப்பிட்ட காலம் கழித்து (1 வருடம் அல்லது 6 மாதம் கழித்து) விற்றால் இந்த செலவு இல்லை
தொடங்கும் செலவு (initial expense) 4% வரை தெரியாது தவிர்க்க முடியாது NFO வாங்காமல் இருப்பதுதான் நல்ல வழி


இந்த செலவு விவரங்களை எல்லாம் நாம் ஆர்வமாக இருக்கும்பொழுது ஒவ்வொரு நிதியிலும் எவ்வளவு என்று படிப்போம். இதே துறையில் ஈடுபடுவர்களுக்கு சில மாதங்களில் எந்த நிதியில் எந்த செலவு என்பது அத்துப்படி ஆகிவிடும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் முதலில் ஆர்வம் இருந்தாலும், பின்னர் குழப்பமே மிஞ்சும்.

அதனால், (அ) புதிய ஃபண்ட் களை வாங்க வேண்டாம். (ஆ) முதலீட்டை 3 வருடங்களுக்கு விற்க வேண்டாம் (இ) முடிந்தால், நேரடியாக நிறுவனத்திடம் வாங்கவும். இது ஒவ்வொரு பரஸ்பர நிதிக்கும் ஒரு முறை செய்ய வேண்டும். கொஞ்சம் தொல்லை பிடித்த வேலை என்றாலும், உங்களுக்கு பயனளிக்கும். குறிப்பாக, 15 அல்லது 20 வருடம் பணம் எடுக்க மாட்டேன், இது நெடுங்கால முதலீடு என்று நினைப்பவர்களுக்கு இது முக்கியம். நீங்கள் 3 அல்லது 5 வருடத்தில் எடுத்துவிட்டால், எஜண்ட் மூலம்போவதில் அவ்வளவு இழப்பு இல்லை. கொஞ்சம்தான் இழப்பு. இது இல்லாவிட்டால், entry load வாங்காத சில ஃபண்ட்கள் இருக்கின்றன. அவற்றை வாங்கலாம். (ஈ)expense அதிகம் இல்லாத பரஸ்பர நிதி எது என்று பார்த்து வாங்குவது கடினம். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் இது மாறும். ஏறக்குறைய எல்லா நிதிகளிலும் இது 1% இருப்பதால், இதை யோசித்து நேரத்தை வீணாக்க்காமல், போனால் போகட்டும் என்று விட்டு விடுவது நலம்.

நமக்கு ஒரு செலவைக் குறைக்க சுலபமான வழி இருந்தால் அதைக் கடைப்பிடிப்போம். வழி மிகக் கடினமானது, நாம் அடிக்கடி பார்த்து யோசித்து முடிவெடுக்க வேண்டி இருக்கும் என்றால் , பேசாமல் செலவை ஏற்றுக்கொள்வோம். இதுதான் நீண்ட காலத்தில் நமக்கு உகந்தது, நம்மால் செய்யக்கூடியது.

2 comments:

Anonymous said...

Dear sir,
Thanks for the informative post.One problem is I can't able to see the 4th coloum of the table completly.can u do something for that.2nd could give us some information about insurance basic also.Importantly what and all we need to look when we go for insurance.As you told in this feild also lot'f people are misleaded by the agents.We don't have any web sites to tell such things in tamil. So your help in this regard will help lot of tamil people. Thank you once again.

S. Ramanathan said...

நன்றி மகேஷ். 4வது column தெரியவில்லை என்கிறீர்கள். நான் 5 column வேறு எழுதி இருக்கிறேன், எல்லாம் waste ஆ? :-)

Firefox இல் 4.5 column தெரிகிறது. Explorerஇல் 3.5 column தெரிகிறது. இப்போதைக்கு சரிப்படுத்தும் வழி தெரியவில்லை. நண்பர்களைக் கேட்டு மாற்ற முயல்கிறேன்.

Insurance: Term இன்சூரன்ஸ்தான் எடுக்க வேண்டும் என்பது மட்டும் எனது strong opinion. மற்றதெல்லாம் ”போங்கு” என்பது என் கருத்து, ஆனால் பரஸ்பர நிதி அளவு விவரமாகத் தெரியாது.

நான் இவ்வாறு முடிவுக்கு வரக் காரணம்: insurance என்பது காப்புக்காக நாம் எடுக்கும் பந்தயம். term இன்சூரன்சில் நாம் ‘அடுத்த 10 வருடத்திற்கு, ஆண்டுக்கு 2000 ரூபாய் கட்டுவேன், நான் செத்தால் என் குடும்பத்திற்கு 10 லட்சம் நீங்கள் கொடுக்க வேண்டும். சாகா விட்டால் பணம் உங்களுக்கு”என்று தெளிவாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும், நாம் “இந்த வருடம் சாகப்போகிறேன்” என்று சொல்லி 2000 ரூபாய் கட்டுவோம். ”இல்லை” என்று சொல்லி நிறுவனம் 10 லட்சம் ‘bet' வைக்கும். யார் ஜெயித்தார்களோ அவர்களுக்கு எல்லாப் பணமும் போகும்.

நான் இவ்வாறு எழுதுவதற்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுதான் உண்மை.

மற்ற இன்சுரென்ஸில் என்ன செய்கிறார்கள் தெரியுமா? உங்கள் பணத்தை எடுத்து, கொஞ்சத்தை term இன்சுரென்சில் போட்டு மிச்சத்தை பங்கு வணிகத்தில் முதலீடு செய்கிறார்கள். நல்ல கமிஷனும் எடுத்துக் கொள்கிறார்கள். இது இவர்கள் செய்வதற்கு பதில் நாமே செய்யலாம். இவர்கள் நம் இரண்டு வேலையை எடுத்து ஒன்றாக்கி எளிமைப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். நம்மில் பலருக்கும் உள்ளே நடக்கும் விவரம் தெரியாததால், black box ஆக இருப்பதால், நம் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

இதற்கு மேல் விவரம் தெரியாது. அதனால் தனிப் பதிவு எழுதவில்லை.